முறையாக சுகாதாரம் பராமரிக்கப்படாதது முதல் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனத் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.
சாத்தூர் அரசு மருத்துவமனையில், அங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ``அரசு மருத்துவமனையை இனியும் நம்ப முடியாது" என்று தெரிவித்துள்ளார். தமிழகம் மிகச்சிறந்த மருத்துவர்களுடன், ஏழை எளியவர்களுக்கும் மிகச்சிறந்த மருத்துவ வசதி கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பல்நோக்கு மருத்துவமனை வரை இலவச மருத்துவ சேவையை வழங்கிவருகிறது. ஆனால், அரசு மருத்துவமனையில் முறையாகச் சுகாதாரம் பராமரிக்கப்படாதது முதல் முறையான சிகிச்சை அளிக்கப்படாததுவரை எனத் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.
இந்த நிலையில்தான், ரத்த வங்கிமூலம் ரத்தம் பெற்று, அதை முறையாகப் பரிசோதிக்காமல் வேறு ஒருவருக்கு ஏற்றியதால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். இதுபோல இந்த ஒரு வருடத்தில் அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
சம்பவம் 1:
கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என்றும், உள்நோயாளிகளைக் கவனிக்கச் செவிலியர்களும் இல்லை என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தினமும் ஆயிரம் பேருக்கு மேல் வெளிநோயாளிகளாகச் சிகிச்சைக்கு வரும் அரசு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர்தான் வருகிறார். மேலும் ஊசிபோட இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நோயாளிகள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
சம்பவம் 2:
இந்த ஆண்டு ஜனவரியில், திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக காரில் வந்திருக்கிறார், தனலட்சுமி. பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த தனலட்சுமியை, மருத்துவமனையில் அனுமதிக்காமல் காலந்தாழ்த்தி வந்துள்ளனர். மருத்துவமனைத் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த தனலட்சுமிக்கு காரிலேயே குழந்தை பிறந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையில் காரிலேயே குழந்தை பிறந்ததையடுத்து பதறிப்போன மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக தனலட்சுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைகயளித்தனர்.
சம்பவம் 3:
கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சசிகலா. கர்ப்பமாக இருந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, ஊசிமூலமாக மருந்து செலுத்தப்பட்டது. அலட்சியமாகச் செலுத்தப்பட்டதால், ஊசியின் பாதிமுனை உடைந்து சசிகலாவின் கையின் உள்ளே சென்றுவிட்டது. நாளடைவில் அவருக்கு வலி ஏற்பட, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, உடைந்த ஊசி உள்ளே இருப்பது தெரியவந்தது. இதன்பிறகு, அவர்களை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவைச்சிகிச்சை செய்துள்ளனர். ஊசியும் அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறி, ``இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது சசிகலா மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திடீரென நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். சசிகலாவுக்கு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது.
இந்த வரிசையில்தான் சாத்தூர் மருத்துவமனையும் இணைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்தம் குறைவாக இருப்பதால், அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 20 நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ரத்தம் செலுத்தப்பட்டதில்தான் பிரச்னை என்று தெரிந்ததும், அந்த ரத்தம் யாருடையது என்று விசாரிக்கப்பட்டது. அப்போதுதான் ரத்தம் கொடுத்தவர் இருமுறை ரத்ததானம் செய்துள்ளார் என்பதே தெரியவந்தது. இதையடுத்து, எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு தற்போது மதுரையில் சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் இருக்கச் சிறப்புக் கவனம் எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டமானது. இவர்களுக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகள் செய்யப்படும். எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல், அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். குழந்தைக்கு எச்.ஐ.வி வராமல் தடுக்கச் சிகிச்சை அளிக்கப்படும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.