05/12/2018

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ், நோயாளி பலி...


கரூர் அருகே நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வந்த நோயாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவ நுட்பனர் படுகாயம் அடைந்தனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ், அருகில் உள்ள மயிலம் பட்டியில் ஒரு நோயாளியை ஏற்றிக்கொண்டு கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் வழியில் வெங்ககல் பட்டி என்னுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 108 ஆம்புலன்சில் ஏற்றி வந்த நோயாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் ஆம்புலன்சை ஓட்டிவந்த தங்கராஜ் என்பவரும், அவருடன் வந்த அவசரகால மருத்துவ நுட்பநர் ஆண்டி வேல் என்பவரும் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்புலன்சில் இறந்த நோயாளி ஜெயராமன் (67), கூலி தொழிலாளி ஆவார். கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் விநோபாச்சிபுரம் தரகம்பட்டியை சேர்ந்தவர். அவரது மனைவி வேலம்மாள். இந்த விபத்துக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ள விளக்குகள் முழுமையாக வெளிச்சம் தராததே காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.