28/12/2018

ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் 
-(பாரதி)...

வெளிநாட்டு ‘அறிஞர்களும், உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்த பின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே. பிராமணர்கள் திராவிடர்களே.

திராவிடர்கள் யார்?

தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன..

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

கிரிக்கெட் ஆடும் திராவிடன்...

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது?

ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர்.

கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்..

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்.. அது சரியல்ல.

உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

திராவிடாசாரியா...

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்...

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ...

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் மதறாசி ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்.. இது போலத் தான் திராவிடன் என்பதும்.

தமிழ் நாடு — திராவிடநாடு அல்ல...

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை..

இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை.

இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்..

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை.

பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை.

திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.