27/01/2019

பல்லாங்குழிக்கு பின் இத்தகைய உளவியல் சிந்தனையா – ஆதி தமிழன் அற்புதங்கள்...


இப்போது நாம் பார்க்க இருக்கும் விளையாட்டு பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களாகவே இருக்கும்.

சரி பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களில் என்ன சமநிலை போதிக்கப்படுகிறது. நாம் பார்க்கவிருக்கும் விளையாட்டு பல்லாங்குழி, பல்லாங்குழியின் நோக்கம் பற்றி அறிந்து கொள்வோம்..

பல்லாங்குழி விளையாட்டு அதிகமாக பெண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது, இந்த விளையாட்டு பெண்களுக்கு பல உளவியல் நற்கருத்துக்களை போதிப்பவையாகவே உள்ளன.

ஆம்.. பல்லாங்குழி என்பது இரு வரிசையில், வரிசைக்கு ஏழு குழி என்ற வகையில் மொத்தம் 14 குழிகளோடும், குழிக்கு ஐந்து புளியங்கொட்டை என்ற வீதம் விளையாடப்படும் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடுபவர் எதாவது ஒரு குழியில் இருந்து புளியங்கொட்டைகளை எடுத்து அக்குழியைத் தொடர்ந்து இருக்கும் அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொரு கோட்டையாக நிரப்ப வேண்டும்.

இப்படியாக எடுக்கப்பட்ட கொட்டைகள் முடியும் குழியை அடுத்த குழியில் இருந்து மீண்டும் கொட்டைகளை எடுத்து அதே போன்று மற்ற குழிகளை நிரப்ப வேண்டும்.

ஒரு தருணத்தில் கொட்டைகள் முடியும்  போது ஒரு வெற்று குழி உண்டாகும், அப்போது அந்த வெற்றுக்குழியை துடைத்துவிட்டு அதனை அடுத்து இருக்கும் குழியில் இருக்கும் கொட்டைகளை தனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது தான் அந்த ஆட்டக்காரர் வெற்றி பெற்ற கொட்டைகள்.

இதை தொடர்ந்து அடுத்த ஆட்டக்காரர் இதே போன்று  ஆடத்துவங்குவார்.

ஆட்டத்தின் இறுதியில் எவரிடத்தில் வெற்றி பெற்ற கொட்டைகள் அதிகம் உள்ளதோ அவரே வென்றவர் ஆவார்.

இந்த விளையாட்டின் நோக்கம் என்ன தெரியுமா...

கிடைத்ததை பெருக்கவும், பெருகும் போது பிறருக்கு கொடுக்கவும், கொடுப்பதையும் ஏற்ற இறக்கம் இன்றி சமமாக கொடுக்க வேண்டும், என்றாவது ஒரு தருணத்தில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாத நிலை வரும் போது, நிச்சயம் ஒரு புதையல் உன்னை வந்து சேரும் என்பதே இந்த ஆட்டம் உணர்த்தும் விதி.

ஈகை பண்பை நமது மகளிர்களுக்கும் சிறுவர்களுக்கும் போதிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த விளையாட்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.