கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட எரிபொருட்களை எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நெற்களஞ்சியாகத் திகழும் காவிரிப் படுகையில் திணிக்காதே, எமது வேளாண் மண்டலத்தை அழிக்காதே என்று வலியுறுத்தி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் தஞ்சையில் பிப்ரவரி 23 சனிக்கிழமையன்று மாபெரும் மக்கள் பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக காவல்துறை.
தமிழ்நாட்டின் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக – தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் - ஹைட்ரோகார்பன் மற்றும் கெய்ல் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டங்கள், அணு மின் திட்டங்கள், அனல் மின் திட்டங்கள், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, 6 வழிச்சாலைத் திட்டங்கள், துறைமுகங்களை விரிவுபடுத்தும் சாகர்மாலா திட்டங்கள் ஆகியன திணிக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் யாவும் தமிழ்நாட்டின் வேளாண் பூமியான காவிரிப் படுகையையும், மக்களின் வாழ்வாதாரங்களுக்கு அரணாக திகழ்ந்துவரும் இயற்கைச் சூழலையும், நிலத்தடி நீர், காற்று, கடல் என்று அனைத்தையும் மாசுப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜனவரி 25ஆம் தேதியன்று, இயற்கை ஞானி நம்மாழ்வார் ஐயா பிறந்த இளங்காடு கிராமத்தில் தொடங்கப்பட்டது. பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் க.கா.இரா.இலெனின் தலைமையில் தங்க. சண்முக சுந்தரம் உள்ளிட்ட தோழர்களோடு தொடங்கிய பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இந்த மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் போது நீங்கள் துண்டறிக்கைகள் எதையும் மக்களிடம் வழங்கக்கூடாது என்று தோழர் இலெனினிடம் காவல்துறையினர் நிபந்தனை விதித்தனர். ஏனெனில் தமிழ்நாட்டை பாலையாக்கும், தமிழ் மக்களை அகதியாக்கும் பேரழிவுத் திட்டங்களின் அபாயங்களை விளக்கி ‘தமிழ் மக்கள் மீதான பேரழிவுத் திட்டங்களை முறியடிப்போம்’ என்ற பெயரில் இலெனின் அவர்கள் எழுதியுள்ள 16 பக்க புத்தகம் அச்சிடப்பட்டு ரூ.20 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு அப்போதே வழங்கப்பட்டது. இதனைக் கண்டதும் அதற்குத் தடை விதித்தது மாவட்டக் காவல்துறை!
தமிழக அரசின் பரிபூரண இசைவுடன் தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசு திணிக்கும் திட்டங்கள் யாவும் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் என்றே கூறி நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படியாயின் இத்திட்டங்களின் அபாயத்தை விளக்கிப் பேசினாலோ துண்டறிக்கை அளித்தாலோ காவல்துறையை வைத்து அதனை தடுப்பது ஏன்? மக்கள் நலத் திட்டங்கள்தானே? வளர்ச்சிக்கான திட்டம் என்றால் யாருக்காக? என்று அரசும் துண்டறிக்கை கொடுத்து மக்களுக்கு விளக்கலாமே? அதைச் செய்யாமல் துண்டறிக்கை வழங்க முற்பட்டாலே ஏதோ வெடி வைப்பதுபோல் அலறிக்கொண்டு காவல்துறையைக் கொண்டு பரிமுதல் செய்வது ஏன்? அப்படியானால் இத்திட்டங்கள் பற்றி நாங்கள் புத்தகம் போட்டு சொல்வதெல்லாம் உண்மை என்று இந்திய அரசும், தமிழக அரசும் ஒப்புக்கொள்கின்றன என்றுதானே பொருள்?
மன்னார்குடியை மையமாக வைத்து 630 சதுர கி.மீ. பரப்பில் மீத்தேன் எரிவாயு எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதை எதிர்த்து காவிரிப் படுகையை காப்போம் என்று ஐயா நம்மாழ்வார் தலைமையில் மாபெரும் மக்கள் இயக்கம் நடத்தி அத்திட்டத்தை தடுத்தி நிறுத்தியதில் இலெனின் அவர்களுக்கு பேரும் பங்கு உண்டல்லவா? தமிழக அரசு விவசாயிகளின் எதிர்ப்பை நியாயம் என்றுணர்ந்து அத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா நிறுத்தினாரே!
அந்த தலைவரின் வழியில் நின்று ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு, எதையும் வெளிப்படையாக, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகவும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்கக் கோரும் பேரணிக்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதேன்?
தங்கள் மண்ணின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக கதிராகமங்கலம், நெடுவாசல், மாதிரிமங்கலம், தென்னஞ்சாறு, காரியமங்கலம், உக்கடம் கமலாபுரம் உள்ளிட்ட எண்ணிலடங்கா காவிரிப் படுகை கிராமங்களில் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்களே?
ஹைட்ரோகார்பன் திட்டங்களை தங்கள் அரசு அனுமதிக்காது என்றுதான் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் ஓ.என்.ஜி.சி. தனது பாணியில் சொல்லாமல் கொள்ளாமல் வந்து துரப்பணப் பணிகளைத் தொடங்குகிறதே? மக்கள் எதிர்ப்புக்கு எந்த மரியாதையும் இல்லையே?! அதனால்தான் இப்போது திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்து மக்கள் கடந்த 15 நாட்களாக தங்கள் பூமியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தங்கள் எதிர்ப்பை பலமாக்க காட்ட ஒரு இலட்சம் விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு நடத்தவுள்ள தஞ்சை பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் எப்பாடுபட்டாவது நடத்தி, பேரழிவுத் திட்டங்களில் இருந்து காவிரிப் படுகையை காக்கத் திரள்வோம் என்று உறுதி பூண்டுள்ளனர்.
இதற்குப் பிறகாவது தமிழக அரசு தமிழ்நாட்டின் மக்கள் பக்கம் நின்று காவிரிப் படுகையை காக்க வேண்டும் என்பதற்காகவே இப்பேரணி நடத்தப்படுகிறது.
நம் கண் முன்னே நமது மாபெரும் வேளாண் மண்டலம் அழிவதை தடுத்து நிறுத்துவோம். பிப்ரவரி 23 சனிக்கிழமை, தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் இருந்து திலகர் திடல் நோக்கி நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கத் தயாராவோம். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் போர்க்கொடி உயர்த்துவோம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.