25/02/2019

சக்தி... The Power...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்..

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள்,இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதை மட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்து விடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டைமட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுடகுலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன் மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும்.உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வ தென்றால், ‘சும்மா பூந்து விளையாடுங்க..

சிறுவயதில் நாமெல்லாம்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும் போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக்கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓடவிடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது பைபிள். நம் ஊரிலும் ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்று ஒரு வாசகம் உண்டு.

நான் சொல்லும் இந்த மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று நமக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.