உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் (1749-1823) பிரிட்டிசு (BRITISH) ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு.
ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார்.
ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிசு நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது.
நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர்.
அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன. மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது.
அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர்.
அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.
எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு.
தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு.
சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு.
உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு.
இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும்.
நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.
மருத்துவர் ஜென்னருக்கு மரியாதை செய்த மாவீரன் நெப்போலியன் எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...
அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்சிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன்.
அதனை அறிந்த ஜென்னர் பிரான்சில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது.
அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார்.
முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.