அழகுமுத்துகோன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து என்பது இவர்களது குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) தாய் அழகுமுத்தம்மாள். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.
1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் மன்னராக முடிசூடிக்கொண்டார்.
எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்..
ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?' என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான்
வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. போரில் வீர அழகுமுத்துகோனின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.
எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள்..
"மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்"என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், "தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் " பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்த மற்ற எவரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.
அவரின் இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.
பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.
.
கி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..அங்கு தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டியும், மத்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டும் பெருமைபடுத்தியுள்ளது...
இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, தமிழ் சமூகம் பெருமை தேடிக் கொண்டது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.