01/08/2020

யார் இந்த ஆரியர்கள - 1...



வரலாற்றினை நாம் திருப்பிப் பார்க்கும் பொழுது ஒன்று நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது.

சில விடயங்கள் மறக்கப்பட்டு இருக்கின்றன.
சில விடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

அதுவும் இந்தியாவின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தெளிவானப் பக்கங்களை விட குழம்பிய பக்கங்கள் தான் அதிகம் தெரிகின்றது. குழம்பிய பக்கங்களில் பொதுவாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் நமது பயணத்திற்கான சில விடயங்கள் அந்த குழம்பியப் பக்கங்களில் இருப்பதினால் நாம் அப்பக்கங்களை இப்பொழுது கண்டுத் தான் ஆக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன் ஒருக் கேள்வி...

இந்தியாவின் மேல் இது வரை எத்தனை பேர் படை எடுத்து வந்து இருக்கின்றனர்?.

இக்கேள்விகளுக்கு நாம் வரலாற்றில் படித்த பதில்கள் அனேகமாக முஹம்மது கோரியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் வரை சென்று முடியும். அதாவது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தேதி வரை இப்பட்டியல் நீளும். இல்லை கோரிக்கு முன்னரும் படையெடுத்து வந்தவர்கள் தெரியும் என்கின்றீர்களா. நல்லது தான். ஏனெனில் நாம் அவர்களைத் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

அதற்கு முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. நமக்காக அங்கே பெர்சியப் பேரரசர் சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் காத்துக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெரும் படையோடு. வரலாற்றுக் குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர். பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால் கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கோ அவ்வாறு இல்லை. திறந்தே இருக்கின்றது.

இந்நிலையில் தான் பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது.

காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர்.

அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு.

அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார்.

இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.

மேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது." என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India).

மேலும் ர.ச. ஷர்மாவின் " சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது." என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் - ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma - Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது 'ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley - The Myth of the Aryan Invasion of India)' என்ற தனது புத்தகத்திலே 'ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்கே நாம் காண வேண்டி இருக்கின்றது இந்திய- ஈரானிய இனக்குழுக்கள் என்ற சொல்லையே. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றின. அவர்களின் மூலமே இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும் பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு சான்றாக தட்சசீலத்தை ஆண்ட அம்பி என்ற அரசன் தான், இந்தியா அரசனான புருசோதமனின் மேல் தான் கொண்ட பொறாமைக் காரணமாக அலேசேண்டேருக்கு இந்தியாவின் மேல் படை எடுத்து வர ஒரு ஓலை அனுப்புகின்றான் என்பது வரலாறு. அந்த அம்பியும் ஒரு பெர்சிய கலப்பினத்தவன் என்று கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகின்றார் (K.L.Khurana - The Political and Cultural History of India).
"பெர்சிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் அரசியலில் உள்ள பலவீனங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இதுவே கிரேக்கர்களையும் பின்னர் பக்ட்ரியன்களையும் இந்தியாவின் மீது படையெடுத்து பின்னர் வரச் செய்தது."

"அம்பி பண்டைய இந்திய வரலாற்றில் தனது அரசியல் சுய நலத்துக்காக புருசோதமனுக்கு தோற்கடிக்க அலேசேண்டேரை இந்தியா வரக் கூறி ஓலை அனுப்பிய ஒரு துரோகியாகவே குறிக்கப்படுகின்றான்."
சரி... இப்பொழுது இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தோன்றிவிட்டன. அலேசேண்டேரும் இந்தியாவின் மீது போரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பெர்சிய தாக்கமும் இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தோன்றுகின்றான்.

சந்திர குப்த மௌரியன். - தோன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய - ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட மாபெரும் சக்கரவர்த்தி அசோகன் வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப் பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சோழர்களையும் தவிர்த்து. மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே ஒரு மாற்றமும் வருகின்றது.

அசோகன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப் பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தான் காலங்கள் ஓடுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில் பிரகதரத்தனை வந்து அடைகின்றது. அவனுடைய பரமரையில் யாருக்கும் கிட்டாத ஒரு பெயர் இவனுக்கு கிட்டுகின்றது - 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' என்று. அதற்கு காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி ஆவான்.
தன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன் - ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆரியன்.
இவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.

புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலையே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம் கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. சரி இப்பொழுது மீண்டும் புஷ்யமித்ர சுங்கனிடம் வருவோம். புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன் அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது. வேத வேள்வியும் தான்.

ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் ஒரு முடிவுக்கு வருகின்றது.

இம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). ஒற்றுமை என்னவெனில் இவர்களும் ஒரு பெர்சிய இனக் குழுவை சேர்ந்தவர்கள் தான். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப் பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் ஒரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல் முடிவடைகின்றது.

முடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள் (Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த குழப்பத்தை இவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது. தற்காலியமாக.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி நிலவும் ஒரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப் பகுதியிலோ இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில் இருந்தும் சரி... மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும் தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.

கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை குஷானர்கள் (Kushanars) என்ற சீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள் என்பவர்கள் இன்னொரு இரானிய நாடோடி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின் முன் சகர்கள் தோற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. கி.மு முடிவில் இருந்து கி.பி முதல் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். இவ்வினத்தில் தான் நாம் முன்னர் கண்டு இருந்த கொண்டாபோராஸ் (Gondophares) என்ற அரசன் இருக்கின்றான். கொண்டாபோராஸ் இவனைத் தான் தோமா சென்று சந்தித்தார் என்று வரலாறு கூறுகின்றது.
இதுவே கி.மு வின் முடிவில் இந்தியா இருந்த நிலைமை.

வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இருந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும் சோழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் போல் பல பல இந்திய - இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த ரோமர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.

பொதுவாக இந்தியாவில் அன்னியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமசுகிருதம் குறித்தோ அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில் நிலவியதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்நிலையில் கி.பி யில் நடந்தது என்ன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.காண்போம்...!

சென்ற பதிவில் இந்தியாவினை கி.பி காலத்தின் தொடக்கத்தில் விட்டு விட்டு வந்தோம். அப்பொழுது இந்தியாவில் அன்னியர்கள் பலர் இருந்ததாகவும் மேற்கு பகுதிகள் முழுமையாகவே அவர்களிடம் இருந்ததையும் நாம் கண்டோம். இனி கி.பி யில் நடந்தது என்ன என்றுக் காண்போம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர் என்றுக் கண்டோம் அல்லவா. ஆனால் அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. காரணம் - குஷானர்களின் படையெடுப்பு. நாம் சென்ற பதிவில் கண்டு இருந்தோம் அல்லவா சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர் என்று, அதே குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது பார்தியர்களின் அரசு வீழ மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும்.

அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னோடிகள். அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது வரிசையாக மத்திய ஆசிய நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.
இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சரி இப்பொழுது மீண்டும் குசானர்களிடம் வருவோம்.

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் ஓட கி.பி மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது.

இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.

சாதவாகனர்கள் இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த ஒரு சகர் அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியோ மேற்கில் மீண்டும் வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள் அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் ஒரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது. தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன் காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

களப்பிரர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்ன நடந்தது என்று ஆய்வுகள் தான் கூற வேண்டும். சரி இப்பொழுது நாம் மீண்டும் குப்தர்களை காண செல்வோம்.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம் மீண்டும் இந்தியாவின் ஒரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் போன்ற மாபெரும் வீரர்கள் தோன்றுகின்றனர். பெர்சியர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெருன்பான்மையான பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில் வருகின்றது.

மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் குப்தர்களின் முன் அவை தோற்றே போகின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது. இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம் ஹுன்னேர்கள் (Huns). வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடோடி இனத்தவர். இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது. குதிரை வில்லாளிகளையே முக்கிய ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி ரோமப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான் இந்தியாவின் மேற்குக் கதவினை இப்பொழுது தட்டிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனைக் காலம் தான் குப்தர்களாலும் அக்கதவினைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க முடியும். குப்தர்கள் பின் வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது. குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள் பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு பிரிவுகளாக பிரிகின்றது. அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். சிதறிக் கிடக்கும் பிரிவுகளை ஒன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால் எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானோ அவ்வாறே இறுதி வரத மன்னனும் சதியினால் இறக்கின்றான். அவனை கொள்பவன் அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன் முடிவுக்கு வருகின்றது.

இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தோடு மௌரியப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்ததோ. அதேப்போல் இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் (Harsha vardhan) மரணத்தோடு வட இந்தியாவில் திராவிடர்களின் இறுதிப் பேரரசும் ஒரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட ஒரு உண்மையான இந்திய அரசன்.

அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா ஒரு குழப்பமான நிலைக்குச் செல்கின்றது. பெரிய அரசர்களோ அரசுகளோ இல்லாத ஒரு நிலை வட இந்தியாவினில் இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் ஒரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப் பகுதியில் இருந்து தோன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த ஐநூறு ஆண்டுகள் ஆளப்போவது இந்த குழுவினரே. இக்குழுக்களின் பெயர்களை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். அட அது என்ன பெயர் அப்படின்னு கேட்கின்றீர்களா.
அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான ஒரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் போன்றவர்களே ஒன்றிணைந்து, குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற பெயரில் வருகின்றனர். அரச வரதனின் மரணத்துக்கு பின் இவர்கள் வலு பெற்று வெளியே வருவதை வைத்து அரச வரதனின் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்றே அறிஞர்கள் எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அக்காலம் தொடங்கி இசுலாமியர்களின் படையெடுப்பு வரை வட இந்தியாவின் காலம் ராஜ்புட்ஸ் காலம் என்றே அழைக்கப் பெருவதும் இங்கே கவனிக்கத் தக்கது.

"ராஜ்புட்ஸ் என்பவர்கள் இந்தியா வந்து அங்கேயே தங்கிய சகர்கள், ஹுன்னேர்கள் மற்றும் குசானர்களின் வம்சாவளியினரே ஆவர். காலப்போக்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்." என்கின்றார் கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில.

மேலும் இன்றும் உள்ள ராஜ்புட்டுக்களின் இன வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் அவை நம்மை சகர்களுக்கோ அல்லது ஹுன்னேர்களுக்கோ அல்லது குசானர்களுக்கோ .. ஏன் கிரேக்கர்களுக்கு கூட நம்மை இட்டுச் செல்லும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில ராஜ்புடுக்களின் இனமே 'ஹுனா ஜட் (Huna Jat)' என்று இருக்கின்றது... ஹுன்னேர்களுக்கு சாட்சியாக. நிற்க. இப்படிப்பட்ட ராஜ்புட்டுக்களைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. காரணம் அவர்களைக் காணாது இன்றைக்கு நம் நாட்டில் நாம் காணும் வருணாசிரம தருமத்தை நாம் அறிந்துக் கொள்ள முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.