01/08/2020

பெரியாரும் தமிழ் எதிர்ப்பும் - 3...



ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
*நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன். (விடுதலை. 18-10-1962)..

ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும். (விடுதலை. 06-07-1968)..

மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை. (விடுதலை. 29-06-1968)..

ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுதி-II)..

இதிலிருந்து தெரிவதென்ன?

ஆங்கிலத்தை எதிர்க்காததற்குக் காரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கில மோகம்தான் என்பது தெளிவாகிறதல்லவா.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கருத்துக்களைத் தாங்கி வரும் நந்தன் இதழ், ஆங்கிலம் வேண்டும் என்று சி. சுப்பிரமணியம் சொன்னதால் அவரை முதிர்ந்த குழப்பவாதி என்கிறது. ‘நந்தன்’ வழிப்படிப் பார்த்தால் ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூட முதிர்ந்த குழப்பவாதிகள்! ஆம். ‘நந்தன்’ கொள்கைப்படி ஈ.வே. ராமசாமி நாயக்கர் குழப்பவாதிதான்.

நந்தன் இதழ், ஆங்காங்கே முளைவிடும் இத்தகைய (ஆங்கிலம் வேண்டும்) அடிமைச் சிந்தனைகளையும் நாம் மூர்க்கமாக எதிர்த்திட வேண்டும் என்று சொல்கிறது. ‘நந்தன்’ வழிப்படி, முதலில் எதிர்க்க வேண்டியது ஆங்கிலம் பற்றிய ஈ.வே. ராமசாமி நாயக்கரின் அடிமைச் சிந்தனைகளைத் தான்.

ஏனென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் படிக்கும்போது அந்த அடிமைச் சிந்தனையில் அகப்பட்டுக்கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்ன ஆங்கில மோகம் பற்றியக் கருத்துக்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அறியாமையின் விளைவால் எழும் வீண்வாதங்கள் என்று கருதி தமிழர்கள் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
நந்தன் சொன்னபடி, எதிர்வரும் நூற்றாண்டிலும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகக் கூட அல்ல, மூன்றாந்தரக் குடிமக்களாக வாழ நேரிடும் அவலநிலைக்கு வராமல் தடுக்க வேண்டுமென்றால் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய ஆங்கிலமோகம் பற்றியக் கருத்துக்களை தமிழர்கள் முதிர்ந்த குழப்பவாதியின் கருத்தாகக் கருதி அதை ஒதுக்கிவிட வேண்டும்.
(‘நந்தன்’ இதழின்படிப் பார்த்தால், ‘நந்தன்’ இதழ் எதிர்க்க வேண்டியது ஈ.வே. ராமசாமி நாயக்கரைத்தான், சி. சுப்பிரமணியத்தை அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்று சொன்ன சி. சுப்பிரமணியம் மட்டும் முதிர்ந்த குழப்பவாதியாம். ஆனால் ஆங்கிலம் வீட்டுமொழியாக, நாட்டுமொழியாக ஆக வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் மட்டும் தமிழுக்காக பாடுபட்டவராம். ‘நந்தன்’ இதழின் இந்த ஓரவஞ்சனையை என்னவென்று சொல்லுவது?

ஈ.வே.ராவைப் பற்றி பாவாணர்...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காக என்ன செய்தார் என்ற கேள்வி நமது உள்ளங்களிலே எழுமானால் அதற்கு விடையாக ஒன்றுமில்லை என்ற பதில்தான் வரும். ஆனால் தமிழுக்காக ஒன்றுமே செய்யாத ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஆங்கிலத்திற்காக நிறைய செய்திருக்கிறார். இதை நாம் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதிலிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த கடிதம்!
தமிழ் நாட்டுத் தந்தை ஈ.வே.ரா. பெரியார் அவர்கட்கு ஞா. தேவநேயன் எழுதுவது, வேண்டுகோள்.

அன்பார்ந்த ஐயா,
வணக்கம்.

தாங்கள் இதுவரை அரை நூற்றாண்டாகக் குமுகாயத்(சமுதாய) துறையிலும் மதத்துறையிலும் தமிழ்நாட்டிற்கு செய்து வந்த அரும்பெருந்தொண்டு அனைவரும் அறிந்ததே. ஆயின் மொழித்துறையில் ஒன்றும் செய்யவில்லை. ஒரு நாட்டு மக்கள் முன்னேறும் ஒரேவழி அவர் தாய்மொழியே. ஆசிரியப் பயிற்சிக் கலைக்கல்லூரி தாங்களே ஒன்று நிறுவினீர்கள். ஆங்கிலக் கலைக்கல்லூரி ஒன்றிற்கு ஐந்திலக்கம் உரூபா மானியமாக உதவினீர்கள். இந்நாட்டு மொழியாகிய தமிழை வளர்க்க ஒரு கல்லூரியும் நிறுவவில்லை.

ஆதலால், தாங்கள் பெயர் என்றும் மறையாமலும் தங்கள் தொண்டின் பயன் சிறிதும் குறையாமலும் இருத்தற்குக் கீழ்க்காணுமாறு பெரியார் தென்மொழிக் கல்லூரி எனச் சென்னையில் ஒரு கல்வி நிலையம் இயன்ற விரைவில் நிறுவுமாறு தங்களை வேண்டுகிறேன்.
அன்பன்
ஞா. தேவநேயன்.

குறிப்பு:- திருவள்ளுவர் ஆண்டு 2000 ஆடவை கங-ஆம் பக்கத்தில் 25-06-1969 அன்று இதன் சுருக்கம் வேலூர் நகர சபைத்தலைவர் திரு.மா.பா.சாரதி அவர்களின் தம்பி மகன் திரு.அன்பழகன் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்களிடம் என்னால் நேரிற் கொடுக்கப்பெற்றது. இன்னும் மறுமொழியில்லை.

ஞா.தே.
(தென் மொழி. 7:10, 11 பக்கம்-22-24)
(நூல்:- பாவாணர் வரலாறு)

இந்த கடிதத்திலிருந்து நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் மொழித்துறையில் அதாவது, தமிழுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று, நாம் கூறவில்லை; தமிழுக்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்திட்ட பாவாணர் கூறுகிறார். இத்தனைக்கும் பல ஆண்டுகள் பாவாணர் ஈ.வே. ராமசாமி நாயக்கருடன் இணைந்து சமூகப் பணியாற்றியவர். ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழக மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழித்திட்டவர் என்றெல்லாம் பாராட்டிய பாவாணர் தான் ஈ.வே.ரா. மொழித்துறையில் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுகிறார்.

மேலும் ஆங்கில கலைக்கல்லூரிக்கு ஈ.வே.ரா ஐந்திலக்கம் ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ்வழிக் கல்லூரிக்கு அல்ல. தமிழுக்கு ஒன்றுமே செய்யாத ஈ.வே.ராவைத்தான் தமிழுக்காகப் பாடுபட்டவர் என்று சொல்லித் திரிகின்றோம். இது வெட்கக்கேடான விஷயமல்லவா!
இதிலே கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம், பாவாணர் கடிதத்தை நேரில் கொடுத்தும் ஈ.வே. ராமசாமி நாயக்கரிடமிருந்து பதில் இல்லை. ஈ.வே.ராவுக்கு தமிழ்மொழிமேல் பற்று இருந்தால்தானே பதில் கடிதம் அனுப்புவார்? அவரிடமிருந்து பதில் எதிர்பார்த்தது மலடியிடம் பிள்ளையை எதிர்ப்பார்ப்பது போல்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழ்மொழியை மட்டும் வெறுக்கவில்லை. தமிழ்ப் புலவர்களைக் கூட வெறுத்தார். சங்ககாலப் புலவராகட்டும் அல்லது அவருடன் வாழ்ந்த பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த கவிஞர்களாகட்டும் – அவர்கள் தமிழ் புலவர்களாக, கவிஞர்களாக இருந்தால் அவர்களின் மேல் ஈ.வே.ராக்கு வெறுப்புத்தான் இருக்கும்.

தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர் போன்ற சங்ககாலப் புலவர்களை ஈ.வே.ரா. எப்படியெல்லாம் திட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதேப்போல் பாரதிதாசனும், பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் ம. பொ. சிவஞானமும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வெறுப்புக்குத் தப்பவில்லை. இவர்கள் ஆதரிப்பவர்களையும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் வெறுத்தார். அந்த உண்மைகளைச் சற்றுப் பார்ப்போம்.
பாரதிதாசனுக்குப் பணம் எதற்கு?
பாட்டின் மூலம் நாட்டின் மறுமலர்ச்சிக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனையையும், தனித்தமிழ்ப் பற்றையும் வளர்த்த பெருமை பாவேந்தர் பாரதிதாசனையே சாரும். அவரை சிறப்பிப்பது தமிழன்னையைச் சிறப்பிப்பது போன்றதாகும் என்று அண்ணா கருதினார். ஆகவே தோழர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் கவிஞருக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டப்பட்டது.

28.07.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

பகுத்தறிவுவாதிகளுக்கெல்லாம் அன்று ஒரே சந்தோஷம். ஏன் தெரியுமா?

சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசன் அவர்களது தமிழுக்கு அங்கீகாரம் பெற்ற விழா எனலாம் இதனை! அதோடு மாற்றார் எவ்வளவு இருட்டடிப்புச் செய்திடினும் எங்களாலும் பணம் சேர்த்து முடிப்பு அளிக்க முடியும் என்பதை உணர்த்திய விழா..

சுயமரியாதைக்காரன், நாஸ்திகன் என்று ஏளனமாகக் கருதப்பட்டவர்களுக்கும் ஒரு கவிஞன் உண்டு. அவன் புரட்சிக் கவிஞன் என்றெல்லாம் சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ஆனால் ஒரே ஒரு தலைவருக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை. அவர் யார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.
அவருக்குத்தான் இதில் சற்றும் உடன்பாடு இல்லை. ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரையின் முயற்சி. எதற்கும் கேட்டுச் செய்ய வேண்டாமோ’’ என்று கண்டித்தார்.

(நூல்: பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு – மறைமலையான்)

பாரதிதாசனுக்கு பணமுடிப்பு என்று சொன்னவுடன் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு எவ்வளவு வெறுப்புப் பாருங்கள். இவருக்கு பணமுடிப்பு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். ஆனால் பாரதிதாசனுக்கு பணமுடிப்புக் கொடுத்தால் வெறுப்பைக் கக்குவார்.

கேட்டுச் செய்ய வேண்டாமோ என்று கேட்கிறார். கேட்டிருந்தால் கண்டிப்பாக ஓத்துக் கொண்டிருக்கமாட்டார் என்பதை அவரது பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரும் பல விஷயங்களை கழகத்தவரை, முக்கியமாக அப்போது பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரையை, கேட்காமலேயே செய்திருக்கிறார். 1947-ஆகஸ்ட்டு 15ம் நாள் திராவிடருக்குத் துக்கநாள் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் எவரையும் கலக்காமல் அறிக்கைவிட்டார்.
தன்னுடைய திருமணம் போன்ற விஷயங்களில் கூட கழகத்தவரை கேட்காமலேயே செய்திருக்கிறார்.
அதனால் கேட்டு, செய்ய வேண்டாமோ என்ற கேள்வியை கேட்க ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத் தகுதியில்லை....

- ம.வெங்கடேசன்...

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.