தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் ஆடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் பரப்பிய கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்
கடந்த 25.07.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த முடிவைத்தானேந்தல் கலைமகள் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் கல்ராமன் என்ற வேல்முருகன் (30) என்பவர் ஒரு தனியார் கல்லூரி, தங்கள் சமூகத்தை சேர்ந்தது என்றும், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்று ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் ஆடியோ பதிவு செய்து சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , தூத்துக்குடி ஊரகம் (பொறுப்பு) மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
உத்தரவின்படி மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு கல்ராமன் என்ற வேல்முருகன் என்பவர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி எதிரி கல்ராமன் என்ற வேல்முருகனை குண்டர் தடுப்புச்சட்டததின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஊரகம் (பொறுப்பு) சங்கர் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணபெருமாள் ஆகியோர் எதிரி கல்ராமன் என்ற வேல்முருகனை இன்று (12.08.2020) குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையிலடைத்தனர்.
இது போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை ஆடியோ, புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.