05/08/2020

கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்...



யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.

1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்!

இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.

1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.

ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.

பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.