20/08/2020

பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரளாவில் தனிச் சேனல்...



நாட்டிலேயே முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தனியாக ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது கேரள அரசு.

‘சபா டிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும், சட்டமன்றத்துக்கான அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘’இது நம் மாநிலத்திற்கு மதிப்புமிக்க தருணம். மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் இருக்கிறது. ஆனால் ஒரு மாநில சட்டமன்றம் சொந்தமாக சேனலைத் தொடங்குவது இதுவே முதல் முறை. ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் ஒரு இடத்தில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை மக்களுக்கு வழங்குவது முக்கியம். இது சட்டமன்றத்தின் செயல்பாட்டை இன்னும் வெளிப்படையானதாக மாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சபா டிவியில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதி குறித்து பேசவும், சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் சபா தொலைக்காட்சி மாநில சட்டமன்றத்தின் வெளிச்சத்தை சூரிய உதயங்கள் போல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரப்பும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். சபா டிவியின் சின்னத்தையும் அதன் தீம் இசையையும் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பின்னர் அவர் பேசினார்.

இந்த முயற்சியின் மூலம் மக்களுக்கு சபை நடவடிக்கைகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும், என்றார்.
“நாட்டின் அரசியல் வரலாற்றில் மாநில சட்டமன்றத்திற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இது மக்கள் நலனுக்காக நிறைய நல்ல விஷயங்களைத் தொடங்கியுள்ளது, அவை பின்னர் பிற மாநிலங்களால் பின்பற்றப்பட்டன. கேரள நில சீர்திருத்த சட்டம், தொழிலாளர் நலக் கொள்கைகள், கல்வி சீர்திருத்தங்கள் ஆகியவை மாநில சட்டமன்றத்தின் முக்கிய பங்களிப்புகள். இது மற்ற மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.