19/08/2020

ஸ்டெர்லைட் தீர்ப்பு : தூத்துக்குடி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்...



ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், மற்றும் சிபிஎம், மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா முன்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த தீர்ப்பு மகத்தான தீர்ப்பு. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 13பேரின் உயிர்த்தியாகம் வீண்போகவில்லை. இந்த தீர்ப்பை முன்வைத்து ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் உட்பட அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றால், தமிழக அரசு மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனனர். 

இதுபோல் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூணன், நகர செயலாளர் ராஜா, டிஒய்எப்ஐ முத்து, உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மேலும் ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று மதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்த தீர்ப்பு வைகோவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக தூத்துக்குடி பாளை ரோட்டில் ராஜாஜி பூங்கா முன்பு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி கணேஷ் முன்னிலையில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. தூத்துக்குடியில் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.