04/09/2020

காஞ்சீபுரத்தில் அர்ச்சகர் வேலைக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது....



காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்த நாகராஜ் குருக்கள் உடல் நலமின்றி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உயிரிழந்த நாகராஜ் குருக்களின் மகன் அரிகரன் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பூஜைகள் நடத்தி வருகிறார்.

அரிகரன் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் நிரந்தர அர்ச்சகராக பணிபுரிய அந்த கோவிலில் உள்ள செயல் அலுவலரான செய்யாறை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் அரிகரனிடம் ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அரிகரன் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். முதல் தவணையாக ரூ.40 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத அரிகரன் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இது குறித்து புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் அரிகரன் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள ஆதி பீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் வைத்து கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் வழங்கினார்.

கைது

அப்போது அங்கு மறைந்து இருந்த காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சரவணன் காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் மற்றும் அச்சரப்பாக்கம் சிவன் கோவில் போன்ற கோவில்களின் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.