04/09/2020

கடுக்காய் மருத்துவக் குறிப்பு...



இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, தாவரங்கள் மூலம் இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. இந்த இயற்கை தரும் முறைகளை செவ்வனே பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வை வாழலாம். அவ்வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கடுக்காய்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.

கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

சிறப்புத் தன்மைகள் :

கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மையுடையதாகும். வடமொழியில் ‘மருத்துவரின் காதலி’ எனப்படுகிறது. மருத்துவத்தில் மட்டுமின்றி பொருளாதா£ரம், தொழிலியல் துறைகளில் வெகுவாக பயன்படுகிறது. ‘திரிபலா’ என்பது சித்த மருத்துவத்தில் புகழ்பெற்ற ஒரு கூட்டு மருந்தாகும். இதில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்ற மூன்றும் சேர்க்கப்படுகின்றன. கடுக்காய் என்பது ஒரு கடினமான மருந்து என்று நாம் கருதுகிறோம். ஆனால் கடுக்காயை நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக வாங்கலாம். கடுக்காயின் தோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

பொருளாதாரப் பயன்கள்:

கடுக்காய் மரத்தழைகளை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.

மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.

பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.

தோல் பதனிட டானின் பயன்படுகிறது.

துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.

டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.

முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.

கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.

குணங்கள் :

வலிமையூட்டி, நீர்ப்பெருக்கி, உள்ளழலகற்றி போன்ற குணங்களைக் கொண்டுள்ளது. புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமச்சல், தலைநோய், இரைப்பு, தொண்டை வலி, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளைக் குணப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள் :

கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.