23/12/2020

புரட்சி தோற்றதாக வரலாறே இல்லை...

 


இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது.

பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது.

செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின‌, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன.

கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி.

அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன.

எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள்  இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

உலக புரட்சிகளை எல்லாம் புரட்டி புரட்டி படிக்கிறோம், புரட்சியாளர்களை எல்லாம் பூப்போட்டு வணங்குகிறோம்..

ஆனால் எம் இனத்தின் இழிவை தீர்க்க எந்த புரட்சியையும் நாம் செய்யத் தயாராக இல்லை என்பதுதான் வெட்கமான செய்தி.

எகிப்திலும் லிபியாவிலும் எதற்காக புரட்சிகள் நடைபெற்றன?

வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறைகள், ஊழல் அரசாங்கம், முற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்காகவே மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை எதுமே தமிழ்நாட்டில் இல்லையா?

குடும்ப ஆட்சியும் ஊழல் நிறைந்த அரசும் தமிழ்நாட்டை அறுபது ஆண்டுக்கு மேலாக சீரழித்து வருகிறதே அதற்கெதிராக எப்பொழுதாவது மக்கள் புரட்சி வெடித்ததா?

அரசியல் கட்சிகள் தான் இவற்றுக்காக குரல் கொடுக்கின்றன‌. விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் தான் கண்டன போராட்டங்களில் ஈடுபடுகின்றன அதிலும் அரசியல் உள்நோக்கங்கள் கலந்திருப்பதால், இதை ஒரு அரசியல் பழிவாங்கல்கள் அல்லது எதிர்க்கட்சிகளின் யதார்த்த எதிர்ப்பியல் என்றே பொதுவாகப் பார்க்கப்படுகின்றது.

காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லை பெரியாரில் தண்ணீர் தரவில்லை, ஒக்கனேக்கல்லில் தண்ணீர் இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.

வெறும் ஐந்து நாட்கள் எகிப்திலே ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினால், முற்பது ஆண்டுகால குடுப்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமானால்; அறுபது ஆண்டுகால குடும்ப, ஊழல், அடக்குமுறை அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியாதா?

மெளனத்தின் வலியோடு வாழுகின்ற எம் மக்கள் எவ்வித புரட்சிகளும் செய்யாதது ஏன்?

மக்களை நொந்து என்ன பயன். இலவசங்களோடு எம்மை வாழப்பழக்கி விட்டார்கள் எம் அரசியல் தலைவர்கள், இலவச தொலைக்காட்சி, இலவச வீடு, இலவச சோறு, இலவச மனைவி...

உழைத்து வாழ்ந்து உயர்ந்து நின்ற ஒரு இனத்தையே உறங்கி வாழுங்கள் என சோப்பேறியாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.

எல்லாம் நிச்சயமாக ஒருநாள் மாறும் மாறாது என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறிவிடும் என்று சொல்லுகிறான் மார்க்ஸ்.

மாற்றம் நிகழும் ஆனால் அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டுமா தமிழா?

மாற்றம் வேண்டும் அதை நாம் தானே மாற்றவும் வேண்டும்.

மக்கள் புரட்சி என்றைக்குமே தோற்றதில்லை. வன்முறை வேண்டாம் அறிவாயுதம் ஒன்றே போதும்.

புரட்சி செய்யும் மனதோடு பூத்திரு, காலம் நம் கைகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க காத்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.