05/01/2021

தமிழின் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திராவிடம் தமிழை அழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது...

ஆட்சி மொழியாம் தமிழ், ஆனால் நிர்வாகமோ ஆங்கிலத்தில்.  தமிழ்நாட்டில் விற்கப்படும் மருந்துகள் பற்றிய விபரங்கள் கூட தமிழில் இல்லை.

அரச திணைக்களங்களின் வலைத்தளங்கள் கூட தமிழில் இல்லை.

கல்வி மொழியாகத் தமிழை ஆக்குவோம் என்று உரத்துக் கத்தியவர்கள். பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வரை ஆங்கில வழிக் கல்வி வளர உதவி உள்ளார்கள்.

தற்கால மருத்துவக் கல்வியை தமிழில் 1850 களிலேயே யாழ்ப்பாணத்தில் வழங்கினார்கள்.  தமிழ்நாடு அரசு 1950 களில் மருத்துவக் கல்வியை தமிழில் வழங்குவதற்கு என ஒரு குழு அமைத்தது.  ஆனால் 2012 அதிமுக அரசு பள்ளிக் கல்வியைக் கூட ஆங்கில வழிக்கு மாற்ற பரிசோதனை செய்தது..

இவர்களின் ஆட்சியில்தான் தமிழ் பேச்சு மொழியாகக் கூட அருகி வருகிறது.  எந்த உருப்படியான ஆய்வுகள், செயற்திட்டங்களையும் செய்யவில்லை.

1800 களில் பல தமிழ் அறிஞர்கள் தனியாக நின்று 2000 ஆண்டுகளாக வெளிவந்த அரிய தமிழ் நூல்களை அச்சேற்றினர்.

ஆனால் திராவிட அரசுகளால் அந்த அந்த ஆண்டு வெளிவந்த நூல்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை, அவற்றைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியவில்லை, பகிர முடியவில்லை.

ஈழத்தில் தமிழ் எரிந்த போது, படுகொலை செய்யப்பட்ட போது நாடக பதவி துறப்புகளும் (யாரும் பதவி துறக்கவில்லை.) கபட உண்ணா நோம்புகளும் (காலையில் இருந்து மத்தியானம் வரை) தவிர வேறு என்ன செய்தார்கள்?

தமிழுக்கு நன்மை தரக்கூடிய அனைத்து களங்களில் இருந்தும் அதனை மெல்ல மெல்ல அகற்றிவிட்டு. சிலை எடுப்பதன் பொருள் என்ன. இது ஒருவித ஏமாற்று வேலைதானே, சூழ்ச்சி தானே.

உணவில்லாமல், கல்வியில்லாமல், நலமில்லாமல் இருக்கும் ஒருவருக்கு தொலைக்காட்சி கொடுத்த கதைத்தானே.

யாருக்கு சிலை வைப்பார்கள்.  கடவுள்களுக்கு, அல்லது செத்த பெரியவர்களுக்கு.

தமிழ் தாய் என்ற உருவகப்படுத்தல் இலக்கிய நயகமாக இருக்கலாம்.  ஆனால் அப்படி என்ற ஒன்று இல்லை.

கடவுள் சிலைகளை எல்லாம் எரித்த திராவிட இயக்கத்தினர் தமிழை கடவுளாக உருவகப்படுத்துவது ஏன்.

மக்களை ஏமாற்றும் சமயப் புரளிகளோடு இவர்களும் சேர்ந்துவிட்டார்கள் என்பதால் தான். அல்லது இவர்கள் தமிழ் செத்துவிட்டது.  அதற்கு சிலை வைக்கலாம் என்று எண்ணி இருப்பார்கள்.

தமிழுக்கு சிலை வேண்டாம்.  அதை வழிபட வேண்டாம்.  தமிழை கல்வி மொழியாக்கி அறிவைத் தாருங்கள். அது போதும் தமிழ் வாழ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.