06/03/2021

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

 


சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.