24/04/2021

ஆழ்மனம் இரகசியம்...

 


மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.

visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.

அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள்.

ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.