21/05/2017

பூமியின் (அ)பூர்வ கதை - 1...


மனிதனுக்கு எப்போதுமே வரலாற்றின் மீது மோகம் உண்டு. முன்னாலுக்கு முன்னால் என்ன என்பதில் எப்போதும் ஒரு ஈர்ப்பு கலந்த ஆர்வம் உண்டு அவனுக்கு.

யோசித்து பாருங்கள் நம் தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருந்திருப்பார் எப்படி வாழ்ந்து இருப்பார் ? அவருக்கு தாத்தா ? அவர் தாத்தாவுக்கு தாத்தா?

நம்முடைய ஆரம்பம் என்னவாக எதுவாக இருந்து இருக்கும் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி பட்டது   .?

என்ன தான் கழுத்து வலிக்க திரும்பி பார்த்தாலும் அவனது (அதாவது மொத்த மனித குலத்தின் ) பார்க்க முடிய கூடிய பெருமை மிகு வரலாறு சில லட்சம் ஆண்டுகள் தான்.

ஆனால் தன்னை சுற்றி உள்ள பாறைகளையும் படிவங்களையும் ஆராய்ந்த மனிதன் தனது இனம் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமி பந்து சந்தித்த வரலாறுகளையும்  நிகழ்வுகளையும் வாழ்ந்த விலங்குகளையும் அதன் வாழ்வையும் புரிந்து கொண்டான்.

அதை அறிந்து கொண்ட போது தான் பூமியின் வரலாறு எனும் கடற்கரை பக்கங்களில் தான் ஒரு நாலு அடி கால் தடம் மட்டுமே பதித்து இருப்பதையும் ஆனால் தனக்கு முன்னால் பூமியின் வரலாறு மொத்தம் கடல் போல பரந்து விரிந்து கிடப்பதையும் அதில் பல வகை உயிரிகள் தங்கள் தடங்களை பதித்து பல கோடி ஆண்டுகள் இப்பூமியை ஆட்சி செய்து விட்டு சென்றிருப்பதையும் அறிந்து கொண்டான்.

உதாரணத்திற்கு இந்த பூமி பந்தில் நகரும் மலைகளாக நடை போட்ட டைனோசர் இனம் இன்றிலிருந்து 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்றிலிருந்து 6 கோடி ஆண்டுகளுக்கு முன்புவரையிலான கிட்ட தட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூமியில் வலம் வந்தவைகள்.

அவை வாழ்ந்த கோடி கணக்கான ஆண்டுகளுக்கு பூமிக்கு அவைகள் தான் அரசர்கள்.

ஆனால் மனிதனின் மிக முன்னோடிகள் இரண்டு காலால் நிற்க தொடங்கிய அந்த மூதாதை உயிரினம் உருவான அந்த காலகட்டம் இன்றைலிருந்து  வெறும் 20 லட்சம் வருடங்களுக்கு முன்பு தான்.

அதிலும் குறிப்பாக முன்னேறிய மனிதன்  நாகரிக மனிதன் வெறும் 2 லட்சம் ஆண்டுகளுக்கு மட்டுமே சொந்த காரன்.

சொல்ல போனால் பூமிக்கு கடைசியாக வந்து சேர்ந்த மிக இளையவன் மனிதன்.

நம்முடன் வீட்டில் அன்றாடம்  இயல்பாக காண கிடைக்கக்கூடிய சாதாரண கரப்பான் பூச்சி கூட கோடி கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியில் இருந்து வருகிறது.

நம்முடன் நம் வீட்டில் வசிக்கும் எலி இனம் இன்று உங்களுடன் சேர்ந்து நடக்கும் முன்பே டைனோசர்களுடன் இனைந்து இந்த பூமியில் நடை போட்டவை.

ஒரு சாதாரண கொசு இன்று நம்மை கடிப்பதை போல அந்த கொசுவின் மூதாதையர்கள் டைனோசர்கள் ரத்தத்தை குடித்து வாழ்ந்தவைகள்.

(இன்று மனிதன் எவ்வளவு முயன்றாலும் எலி, கரப்பான், கொசு இம்மூன்றையும் மொத்தமாக அழிக்க முடியாமல் தோற்று போவதை கவனித்தீர்களா).

ஒரு முதலை கூட 10 கோடி ஆண்டுகள் முன்பிருந்தே இருக்கிறது.

தட்டான் பூச்சி அல்லது தும்பி சொல்கிறோமே அந்த பூச்சிக்கு டைனோசருக்கும் முன்பு இருந்தே வரலாறு இருக்கின்றது.

டைனோசர்கள் வருவதற்கு முன்பே இந்த உலகை சுற்றி பார்த்தவைகள் தான் அந்த தட்டான் பூச்சிகள்.

ஆக்டொபஸ் கூட டைனோசர் காலத்திய ஒரு உயிரினம் தான்.

ஆனால், இந்த பூமியின் மொத்த வரலாறை ஒப்பிட்டு பார்க்கும் போது இவைகள் எல்லாம் கூட வெறும் கண்ணிமைக்கும் காலம் தான்.

காரணம் பூமி மொத்தம் 450 கோடி ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாறை கொண்டது.

அதில் முதல் 100 கோடி ஆண்டுகளுக்கு மட்டும் எந்த உயிரினமும் இல்லாமல் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் தனியாகவே சுற்றி கொண்டு இருந்தவள் பூமி தாய்.

வேக வேக மாக ஓட்டி பார்த்தாலும் கூட 450 கோடி ஆண்டுகள் வரலாற்றை... பூமி கடந்து வந்த பாதையை.. அதன் நிகழ்வுகளை  சுருக்கமாக பார்ப்பது கொஞ்சம் கடினம் தான் என்றாலும் இனி நாம் பார்க்க போவது அதை தான்.

பண்டைய மனிதன் தனது வரலாறை குகைகளில் வரைந்தும் செதுக்கியும் சென்றது போல இந்த பூமி தனது வரலாற்றை ஃபாசில் களிலும் பாறை படிவங்களிலும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளது.

நாம் பெரும்பாலும் பூமியின் வரலாற்றை தெரிந்து கொண்டது பூமியின் அந்த குறிப்பேடுகளின் வாயிலாக தான்.

மேலும் விஞ்ஞானம் வளர்ந்து முன்னுக்கு செல்ல செல்ல வரலாற்றை உற்று நோக்க நாம் பின்னுக்கு செல்லுதல் எளிதாகி கொண்டே வருகிறது.

பூமியின் அந்த 450 கோடி ஆண்டு கால கதை... அந்த பூர்வ கதை.. அபூர்வ கதை இனி பார்க்கலாம்.

- பூமி இன்னும் சுழலும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.