விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை கைவிட்டு ஓஎன்ஜிசி வெளியேற கோரி கதிராமங்கலம் மக்கள் மண் சோறு சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் எண்எய் குழாய் பதிப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அய்யனார் கோயில் தோப்பில் 16 நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய் கிணறு திட்டத்தால் விவசாயம் அழிந்து சோற்றுக்குப் பதில் மண்ணைத்தான் உண்ண வேண்டும் என்பதை கூறும் விதமாக போராட்டத்தில் களத்தில் பெண்கள் நேற்று மண் சோறு சாப்பிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ஓஎன்ஜிசி ஆய்வால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் செம்மண் நிறமாக மாறி உள்ளது. காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரியில் போதிய தண்ணீரும் வருவதில்லை. மழையும் குறைந்து விட்ட நிலையில், நிலத்தடி நீரை நம்பி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியின் ஆய்வு பணிகள் தொடர்ந்தால் உண்பதற்கு உணவு இல்லாமல் மண்ணைதான் உண்ண வேண்டிய நிலை வரும் என்பதை உணர்த்தவே இந்த போராட்டம்.
எனவே இயற்கையை பாதிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. இதை உணர்த்தும் வகையில் தான் மண்சோறு சாப்பிடுகிறோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாலையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சந்தித்து பேசினார்.
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாக தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.