தமிழ்நாட்டின் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த கிராமங்களில் 23,000 ஹெக்டேரில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் இத்திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களை எண்ணெய்க் கிணறுகளாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது; அதற்காகவே காவிரியில் தண்ணீர் வழங்காமல் அப்பகுதியை நிரந்தரமாக வறண்டு போக வைக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன்.
அந்தக் குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு தூண்டுதலின் பேரில் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களில் இந்த மண்டலம் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக அந்த கிராமங்களில் உள்ள 22,938 ஹெக்டேர், அதாவது 57,345 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில் பல நிறுவனங்கள் ரூ.92,000 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், எண்ணெய்க் கிடங்குகளையும் அமைக்கும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த மண்டலத்தில் எண்ணெய்க் கிணறுகளோ, எரிவாயுக் கிணறுகளோ அமைக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எண்ணெய் எடுக்காமல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கப் போவதாக கூறுவது நம்பும்படியாக இல்லை.
ஒருவேளை சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே அமைக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் அது சுற்றுச்சூழலுக்கு மிக மோசமான சீரழிவை ஏற்படுத்தும். மொத்தம் 57,345 ஏக்கர் நிலத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அதைச் சுற்றியுள்ள பல லட்சத்திற்கும் அதிகமாக விளைநிலங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் பயனடைவதற்காக அப்பாவி மக்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டில் மொத்தம் 110 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டிருப்பதையும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கும்படி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறித்தும் தொடர்ந்து கூறிவருகிறேன்.
ஆனால், தமிழக மக்கள் நலனை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறிக் கொண்டே இத்தகைய ஆபத்தான திட்டங்களுக்கு கொல்லைப்புறக் கதவுகளை தமிழக அரசு திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் சாலைகள் மற்றும் தொடர்வண்டிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ரூ.1146 கோடி செலவழிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பலி கொடுக்கப்படும் ஆட்டின் கழுத்தில் அணிவிக்கப்படும் மாலைக்கு ஒப்பானது தான். இதனால் அப்பகுதி மக்களுக்கு ஆக்கப்பூர்வ பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை.
இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதிகள் அனைத்தும் கொள்ளிடம் மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகள் ஆகும்.
இப்பகுதிகளில் ஏற்கனவே கடல் நீர் உள்ளே புகுந்து விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் கிட்டத்தட்ட அழித்து விட்டது. கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தில் கலந்ததால் அங்கு விளையும் இளநீரிலும், நிலத்தடி நீரைக் குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டையாக்சின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
அதேபோல் பரங்கிப்பேட்டையில் சாயத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் அங்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 5 அனல் மின்நிலையங்கள் உள்ளதால் சுற்றுச்சூழலும், காற்றும் மோசமாக மாசுபட்டிருக்கிறது.
இந்த நேரத்தில் பெட்ரோக்கெமிக்கல் திட்டமும் செயல்படுத்தப்பட்டால்மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலிலும், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதைப்ற்றியெல்லாம் கவலைப்படாமல் மிகக்கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் பெட்ரோக்கெமிக்கல் திட்டத்தை அறிவிக்க மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.
தமிழக அரசுக்கு அத்துணிச்சல் கிடையாது. ஆனால் மத்திய அரசின் மிரட்டல்களுக்கு பணிந்து இத்தகையத் தீயத் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்கிறது.
சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய இத்தகையத் திட்டங்களுக்கு பொதுமக்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவித்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் கதிராமங்கலம் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வெளியிட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசு அடுத்தக்கட்டமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் குபேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கங்காணி வேலையும், அடியாள் வேலையும் பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெட்ரோகெமிக்கல் திட்டம் திடீரென உருவான ஒன்றல்ல. பத்தாண்டுகளுக்கு முன் முந்தைய திமுக ஆட்சியில் இத்திட்டத்திற்கான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
2012&ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2014&ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்ட மேற்குவங்க அரசு பின்னர் மக்கள் எதிர்ப்புக்கு பணித்து பின்வாங்கி விட்டது.
கேரள மாநிலம் இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டது.
ஆனால், தமிழக அரசு மட்டும் வளமை வாய்ந்த பூமியை பாலைவனமாக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனுக்கு கேடான திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். இதுதொடர்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, கடலூர் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். அதற்கான கால அட்டவணை மற்றும் போராட்ட இடங்கள் விவரம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.