நரேந்திரமோடி உள்ளிட்ட பல இந்துத்துவாதிகள் சமசுகிருதத்தை இந்திய துணைக் கண்டத்தின் முதன்மை மொழியாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு தமிழ்நாடு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
தமிழ்மொழி இந்தியத் துணைக்கண்டத்தின் முதல்மொழி என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்து வரும் வேளையில், சமற்கிருதத்தை இந்துத்துவ -தில்லி வல்லாதிக்க அரசு முதன்மைப்படுத்துவது வரலாற்று மோசடியாகும்.
முதன் முதலில் பிரித்தானிய வல்லாதிக்கம் தான் இந்த சமற்கிருதத்தை உயர்த்திப்பிடித்து வரலாறு எழுதியது. இந்த 'சமற்கிருத' நச்சு விதையை முதன் முதலாக விதைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த லில்லியம் ஜோன்ஸ் ஆவார். (படத்தில் இருப்பவர் வில்லியம் ஜோன்ஸ்)
இவர் இளம் வயதிலேயே கிரேக்கம், இலத்தின், பாரசீகம், ஹீப்ரு, அரபு மொழிகளை கற்றிருந்தார். 1783 இல் கல்கத்தா நீதிமன்றத்தின் நீதியரசாகவும் பணிபுரிந்தார். அவர் இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் மூத்தமொழியாக சமற்கிருதத்தை கருதி வந்தார். அதன் காரணமாக சமஸ்கிருத மொழியை வங்காளப் பார்ப்பன சமஸ்கிருத ஆசிரியர் ராம்இலக்சன் கவிபூசன் என்பவரிடம் கற்றுத் தெளிந்தார்.
இவர் மேலெழுந்தவாரியாக சில சமஸ்கிருத சொற்களுக்கும், கிரேக்கமொழிச் சொற்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக கண்டறிந்து சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்பதாகக் கருதினார். இதன் மூலம் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பக் கோட்பாட்டை வகுத்தார். இதை 1787இல் வங்கத்து ஆசிய சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் அறிவித்தார். இந்தக் கோட்பாடு ஆரிய இன மேலாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கவே பயன்பட்டது.
இந்தியாவிலும், செர்மனியிலும் ஆரிய இனத்தின் ஆதிக்கத்தை தூண்டியதே தவிர எந்தமொழி வரலாற்று உண்மையையும் வலுவான சான்று காட்டி வெளிப்படுத்த வில்லை.
வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக்கு, எச்.எச்.வில்சன் போன்றோர் இக்கருத்தையே அதிகமாக பேசி வந்ததால் சமஸ்கிருத முதன்மை மொழிக்கொள்கையும், இந்தோ ஐரோப்பிய மொழிக்கோட்பாடும் இந்திய வரலாற்றை தவறாக எழுதும் நிலைக்கு கொண்டு நிறுத்தியது.
இந்திய ஆட்சித்துறைப் பணிக்கு இங்கிலாந்தில் I.C.S. படித்த மாணவர்களுக்கு இந்திய வரலாறு தேவைப்பட்டது. 1815 சேம்சு மில் என்பவர் இந்திய வரலாற்றை எழுதி வெளியிட்டார். அவரைப் பின்பற்றியே தொடர்ந்து பலரும் எழுதலாயினர்.
இந்தியர்களுள் பெரும்பாலோர் காட்டு மிராண்டிகளாக இருந்ததால் ஆரியர் வருகைக்கு பின்னரே பண்பாடு உருவானதாக குறிப்பிட்டனர். இதன் மூலம் தவறான இந்திய வரலாற்றுக் கொள்கை அடித்தளமிடப் பட்டது.
அது மட்டுமின்றி, மேலை நாட்டினர் ஆளுவதற்கான கொள்கை வகுப்பாளர்களாகவும் இவர்கள் விளங்கினர். சமஸ்கிருதப் பராம்பரியத்திற்குப் புறம்பான இந்த காட்டுமிராண்டிகளை மேம்படுத்த வெள்ளையர்களுக்கு பொறுப்புண்டு என்றும், பண்பாடற்ற அவர்களை நெறிப்படுத்த கீழ்த்திசை யதேச்சாதிகாரப் போக்கிலேயே (Oriental despotism) ஆள வேண்டும் என்ற ஆளுமைக் கொள்கையையும் வகுத்தனர்.
சமஸ்கிருதம் முதன்மொழி என்பதற்கு எந்த வரலாற்றுத் தரவுகளையும் தரவில்லை. அவர்கள் வேதமொழியும், சமசுகிருதமும் வேறுவேறு மொழிகள் என்பதை அறிந்திலர்.
கி.மு.முதல் நூற்றாண்டுக்கு முன் சமஸ்கிருதம் தொடர்பாக எந்தக் கல்வெட்டும், நாணயமும், மட்கலப் பொறிப்புகளும், முத்திரை எழுத்துகளும் கிடையாது என்பதை அறிந்திலர்.
கி.பி. 350க்குப் பிறகே சமற்கிருத இலக்கியம் பிறந்ததையும் அறிந்திலர். பிறமொழி இலக்கியத்தை தமதாக்க கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் சமற்கிருத மொழி வரலாற்றில் ஒருமொழி பெயர்ப்பு இயக்கம் நிகழ்ந்ததையும் அறிந்திலர்.
சமற்கிருத மொழியின் முந்தைய நிலை பாகதமாகும். அதன் திருந்திய நிலையே சமற்கிருதம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழும், பாகதமும் சில இலக்கண விதிகளிலும், 90% உயிர் எழுத்துகளிலும் ஒன்று படுகின்றன. அதே வேளையில், இவை இரண்டும் ஒரே விதமாக சமற்கிருதத்திலிருந்து வேறுபடுகின்றன.
தமிழும், பாகதமும்- தென் மொழி, வடமொழி என்ற நிலையில் கி.பி.350 வரை தொல்லியலில் காட்சியளிக்கும் போது அக்காலத்தில் சமற்கிருதம் குழந்தையின் தவழும் நிலையில் இருந்ததாக கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உண்மை வரலாறு இவ்வாறு இருக்க சமற்கிருதம் இந்தியமொழிகளின் முதல்மொழி என்பது தவறான வாதமாகும்.
சமற்கிருதம் தமிழைப் போன்றும், பாகதத்தைப் போன்றும் அ,இ,உ, அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. கிரேக்கம், இலத்தீன் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள் ஆல்பா, பேத்தா அடிப்படையிலான அரிச்சுவடி கொண்டவை. இவ்விரு வகை மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தில் சேராதவை என நிரூபிக்க இது ஒன்றே போதுமான சான்றாகும். வில்லியம் ஜோன்ஸ் கூறிய இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப கோட்பாடும் அவரின் கற்பனையில் தோன்றிய ஒன்றாகும். .ஆரியர்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்பது ஏற்க இயலாது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியம் உருவாகி விட்டது. கடைச்சங்க காலத்தின் மூவேந்தர் வாழ்ந்த தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது.
உலகின் முதல் மாந்தன் பிறந்தகம் தென்தமிழகம் என்பதும் முதல் மாந்தன் பேசிய மொழி தமிழ்மொழி என்பதும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உலகிற்கு உரத்துச் சொன்ன உண்மையாகும்.
இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து எழுதும் மரபு உடைத்தெறியப்பட வேண்டும். தெற்கிலிருந்து வரலாறு எழுதும் மரபு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் சமற்கிருத மேலாண்மைக்கொள்கை ஆட்டங்கண்டு ஓட்டமெடுக்கும்!
நூல் உதவி: வே.தி.செல்லம் எழுதிய தமிழகப் பண்பாடும் வரலாறும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.