இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவரும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தேசிய கொடி யுத்தம் எல்லையில் தொடங்கியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் என்றாலே எதிலும் போட்டிதான் என்ற நிலை காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போட்டி என்பது யார் உயரமான தேசியக் கொடியை ஏற்றுவது என்பதில் உள்ளது. இதனைத் தொடங்கிவைத்தது இந்தியா தான் என்றாலும் போட்டியாக மாற்றியுள்ள பெருமை பாகிஸ்தானையே சேரும்.
கடந்த மார்ச் மாதம் பஞ்சாபின் அமிர்தசரஸில் இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டரி பகுதியில் 360 அடி உயரமுள்ள இந்திய கொடி ஏற்றப்பட்டது. இந்தக் கொடிக்கம்பத்தின் அகலம் 24 மீட்டர். எடை 55 டன் ஆகும். ரூ.3.5 கோடி செலவில் பஞ்சாப் அரசின் அமிர்தசரஸ் மேம்பாட்டு டிரஸ்ட் அமைத்த இந்தக் கொடிக்கம்பத்தில் பாஜக அமைச்சரான அனில் ஜோஷி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்துகூட இந்தக் கொடியைப் பார்க்க முடியும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.
எனினும் காற்றின் வேகம் காரணமாக இத்திட்டம் தோல்வி அடைந்தது. ஐந்து முறை தேசியக் கொடி மாற்றப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் வீசிய கடும் காற்றில் தேசியக் கொடி கிழிந்தே போனது. இதையடுத்து இதற்குத் தீர்வு காணும்வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் சுதந்திரதினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று அங்கு மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வாகா எல்லை அருகே நேற்று நள்ளிரவில் 400 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் தங்கள் நாட்டுத் தேசியக் கொடியை பாகிஸ்தான் ஏற்றியுள்ளது. அந்நாட்டு ராணுவத் தளபதி கமர் ஜவேத் பாஜ்வா இதனை ஏற்றிவைத்தார். இந்தத் தேசியக்கொடியின் அகலம் 120 அடி, உயரம் 80 அடி. தெற்கு ஆசியாவிலேயே உயரமான கொடி இதுதான் என்று கூறப்படுகிறது. உலக அளவில் 8ஆவது உயரமான கொடி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.