காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை..
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு, எடப்பாடி பழனிச்சாமி அரசு மறைமுகமாக ஒப்புதல் கொடுத்துவிட்டது என்பதற்கான வெளிப்பாடே, கடந்த 17.08.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தந்துவிட்டால் கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்டுவதைத் தமிழ்நாடு அரசு எதிர்க்காது என்று உறுதி கூறியதாகும் என்று அன்று மாலையே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நான் அறிக்கை கொடுத்தேன். அன்று அது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பார்க்கப்பட்டது.
மறுநாள் (18.08.2017) முக்கிய நாளேடுகளில் என்னுடைய அறிக்கை வெளிவந்தது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசின் இந்தத் துரோகச் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இவற்றுக்கெல்லாம் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மறுப்பு அறிக்கையோ அல்லது விளக்க அறிக்கையோ தரவில்லை.
திருவாரூர் நகருக்கு அரசு விழாவில் கலந்து கொள்ள 19.08.2017 அன்று வந்த முதலமைச்சர் பழனிச்சாமிக்கு, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தினோம். அதன் பிறகு திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்து, மேக்கேத்தாட்டு அணை தொடர்பாக எழுதப்பட்ட அறிக்கை ஒன்றைப் படித்தார். அது ஏடுகளில் வந்துள்ளது.
அதன் முக்கியமான பகுதி வருமாறு...
தமிழகத்துக்கு நீர் தருவதற்கு ஏற்ற இடத்தில் ஒரு அணையைக் கட்டி அதை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் தீபக் மிஸ்ரா, இது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது, இது குறித்து தனியே வாதிடப்பட வேண்டும் என தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் பதில் அளித்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மேக்கேத்தாட்டில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லையெனத் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவையாகும்.
புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு, அதன் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்போது தமிழகத்தின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காதவாறு வலுவான வாதங்கள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படும்.
முதல்வரின் மேற்படி அறிக்கையில் புதிய அணை தொடர்பாக நீதிபதி கருத்து வழங்கியபோது, அதை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் மறுத்தார் என்ற செய்தியில்லை! அந்த வாதத்தை தனியே வைத்துக் கொள்வோம் என்றுதான் கூறியிருக்கிறார்.
அடுத்து, முதலமைச்சர் தன் கூற்றாகக் கூறும்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்போது, தமிழ்நாட்டின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள், மேக்கேத்தாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் கர்நாடகம் புதிதாக அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அம்மா ஆட்சி நடத்துவதாக மூச்சுக்கு மூச்சு முழங்கும் எடப்பாடியார், இந்த அறிக்கையில் மட்டும் “அம்மா” பெயரைத் தவிர்த்தது ஏன்? அம்மா போட்ட வழக்கின்படி நாங்கள் நடந்து கொள்வோம், மேக்கேத்தாட்டு அணையை எதிர்ப்போம் என்று நேரடியாக ஏன் முதலமைச்சர் கூறவில்லை? அங்கேதான் அவர் மறைப்பதற்கு பல உண்மைகள் இருக்கின்றன என்று விவரம் தெரிந்த மக்கள் ஐயுறுகிறார்கள்.
எடப்பாடியாரின் மேற்கண்ட அறிக்கை, மேக்கேத்தாட்டு அணை பற்றிய சாதக பாதகங்களை பேசப் போவதாக குறிப்பிடுகிறதே தவிர, அந்த அணை முயற்சியைத் தடுப்போம் என்று உறுதி கூறவில்லை. பாம்புக்குத் தலையைக் காட்டு, மீனுக்கு வாலைக் காட்டு. என்பது போல் எடப்பாடியாரின் அறிக்கை இருக்கிறது.
மத்திய அரசு மேக்கேத்தாட்டு அணை பற்றி கருத்து வைக்கும்போது, தமிழ்நாட்டு உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதம் செய்வோம் என்கிறார் முதல்வர்.
மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்திற்குத் தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் செயலலிதா போட்ட வழக்கு பற்றி தங்கள் நிலைபாடு என்ன என்று முதலமைச்சர் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
ஏற்கெனவே நடுவண் அரசின் ஏற்பாட்டில் நடந்த ரகசியப் பேச்சில், மேக்கேத்தாட்டு அணைக்கு ஆதரவு தெரிவித்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார் என்ற தமிழ் மக்களின் ஐயத்தை மேலும் வலுப்படுத்தவதாகவும், அதற்கான அவரது ஒப்புதல் வாக்குமூலமாகவும் எடப்பாடியார் அறிக்கை இருக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.