26/09/2017

ஓம் = அ+உ+ம்...


ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே..

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

-ஆசான் திருமூலர்..

அருவுருவ ஒலியொளி (நாதசுடர்) ஓம்..

ஓம் = அ+உ+ம்

இந்தப் பிரபஞ்சமே "ஓம்" என்ற அருவுருவ ஒலி(அருவம் > நாதம்), ஒளி(உருவம் > சுடர்/ சோதி)யிலேயே உருவாகி, அந்த ஓங்காரத்திலேயே ஆதி தொடங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அளவற்ற ஓங்கார நாதத்தைத் தம்முள் தட்டி எழுப்பிக் கேட்டும், அடிமுடி காணமுடியாத ஓங்காரப் பிளம்பாகியச் சுடர்/ சோதியில் இரண்டறக் கலந்தும், பேரின்பமாகிய பேரறிவெனப்படும் பேரருள் பெற்றவரே சித்தர்கள்.

"ஓம்" அதன் ஆற்றல்கள் அளவிட முடியாதளவிற்குப் பல்வேறு பேதங்களாக இருக்கின்றது. அதன் பல்வேறு ஆற்றல்களையே சித்தர்கள் பல்வேறு இறைநிலைகளாக (பல்வேறு கடவுளராக) உருவகித்து உலக மக்களுக்கு விளக்கினர். அந்த ஓங்காரமாகிய அருவுருவ நாதசோதியுடன் இரண்டறக் கலத்தலே ஈடிணையற்ற முத்திகளும், சித்திகளும் பெற்ற சிவநிலை (இறைநிலை) யாகும்.

ஓம் அழிவற்றது, அளவற்ற ஆற்றல்கள் கொண்டது. அதையடைந்த சித்தர்களும் அழிவற்றவர்கள், அளவற்ற ஆற்றல்கள் கொண்டவர்கள். அந்த அழிவற்ற நிலையான இறைநிலையையே சாகக்கல்வியாகவும் மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வாகவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

சித்தர்கள் தாம் பல்கோடி யுகங்கள் தாண்டியும் வாழ்வதாக தங்கள் பாடலில் குறிப்பிடுவதும் இதன் நிமித்தமே.

தினமும் "ஓம்" என்போம். ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் பெறுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.