26/09/2017

லெப். கேணல் திலீபன்...


1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்

உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

உலகின் முதன்முதல் சாத்வீகப் போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.

உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.

தியாக தீபம் திலீபனின் நினைவலைகள்...

திலீபனின் இறுதி உரையிலிருந்து…

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சி.. யில் மிதக்கின்றது.

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்று விட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.

இதில் பிழைகள் இருக்கலாம்.

இதை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.