10/09/2017

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - கடலில் கப்பல் விடுதலின் நுட்ப முறைகள் (SHIP TRAVEL)...


கடல்நீர் அக்காலத்தில் முந்நீர் என அழைக்கபடுகிறது. அதாவது கடலுக்கு முந்நீர் என்பது காரணப்பெயர். ஆற்று நீர், மழை நீர், ஊற்று நீர் ஆகிய மூன்று நிரையும் உடையது கடல் என்பதால் அது முந்நீர் என பெயர்பெற்றது.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும், ஆய்வுக்கும் உரியது.

இந்த முந்நீரில் பண்டைய தமிழர்கள் மரகலங்களை தயாரித்து ஒன்று கூட்டி கப்பல் தயாரித்துள்ளனர். இப்போது நாம் பெரியபடகை கப்பல் என்பது போல் அவர்கள் வங்கம் மற்றும் நாவாய் என்று அழைத்தனர்.

வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
- (மதுரைக்காஞ்சி,536)


நன்றாகப் பாய்விரித்த காற்றால் இயங்கும் மரக்கலம் என்பது இதன் பொருள்.காற்றின் துணையால் இயங்கினமையால்  வளிதரு வங்கம் எனப்பட்டது.

மேலும் காற்று இல்லா சமயத்தில் கைதுடுப்பு செய்ய 16 பேர் கொண்டு துடுப்பு செய்யும் அமைப்பு கீழ் தளத்தில் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இரவு வேலையிலும் மீன்பிடித்தனர். அதற்கு நாவாய்களில் இருந்து இறங்கி சிறிய படகு கொண்டு பிடித்துள்ளனர் அதை திமில்(LIFE BOAT) என அழைத்தனர்.அதில்  விளக்கு எறிக்க மீனில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்களை உபயோகித்துள்ளனர்.

முந்நீர் நாப்பண் திமில் சுடர்போல
- ( புறநானூறு 60;1)

மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர்
- (நற்றிணை 215-5,6)

மேலும் மரகலங்களில் ஏதுனும் சேதம் ஏற்பட்டால் உடனே அடைக்க அரக்கை உருக்கியும் சில பஞ்சு தலைகளை வைத்து உடனே அடைக்கும் தொழில்நுட்பம் அறிவுகொண்ட மாலுமிகள் அதாவது நீகான் கப்பலில் இருந்தனர் என்கிறது சங்க நூல்

சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்

திசைஅறி நீகானும் போன்ம்
- (பரிபாடல் 10;54,55)

ஒருவேளை காற்றோ அல்லது நீகான் பார்வையோ தவறவிட்டால் எப்படி கரை சேர்வார்கள் கரையை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்விக்கு வழி கூறுகிறார்கள்.


இனபெருக்கம் செய்யகூடிய ஆமைகளை கையில் எடுத்து நீர் தொட்டியில் வைத்து கொண்டு கப்பலோடு செல்வர் கரை தவறி விட்டால் ஆமைகளை கடலில் மிதக்கவிடுவர் அது கரை இருக்கும் திசை நோக்கி நகரும் அதன் பின்னாலேயே செல்வார்கள் கரை அடைந்த ஆமை முட்டையிடும். ஆமை சராசரியாக குறைந்தது தொடர்ந்து 180 கிலோமீட்டர் வரை செல்லும்.

அடுத்த உத்தி நிறைய காகங்களை கொண்ட கூண்டுகளை எடுத்து செல்வர்.திசை தவறினால் ஒவ்வொரு காகமாக எடுத்து வெளிவிடுவர் அது கரையை நோக்கி எவ்வளவு தூரம் செல்லுமோ அதுவரை சென்று கடலில் விழுந்துவிடும். அடுத்து மற்றொரு காக்கை பறக்கவிடப்படும்.


இவ்வாறு காக்கையை கொண்டு கரை அடைந்ததால், கரையை நெருங்கிய காக்கை கா!கா! வென கரைந்து ஊருக்குள் வருவதை கண்ட நம் மக்கள் புதிய கப்பல்கள் துறைமுகத்துக்கு வரபோகிறது என அறிவர்.

அதாவது காகம் கரைய விருந்தாளி துறைமுகத்துக்கு வருவார் என்ற வழக்கு காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார் என பழமொழி ஆகியது.

இதோடு  தேவாங்கை கொண்டு திசை அறியும் முறை ஒன்று உள்ளது. அது காலப்போக்கில் அழிந்தது.

இது மட்டுமல்லாமல் கலங்கரை விளக்கம் மிக உயரமாக அமைத்தான் நம் கரிகால் சோழன், இதை கொண்டு நாவாய்கள் துறைமுகத்துக்கு வர ஏதுவாக இருந்தது.

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவின் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
- (பெரும்பாணற்றுபடை 346 to 351)

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்
- (சிலப்பதிகாரம் 6:41)

கடலில் சூறாவளி ஏற்படும்போது சிதைவுகள் ஏதும் கப்பல்களில் ஏற்படாவண்ணம் அதை நிலைநிறுத்த  நங்கூரம் என்ற ஒன்றை வைத்திருந்தனர் அது ஆரம்பத்தில் கல்லில் இருந்தது குறிபிடதக்கது.

கூம்முதல் முருங்க ஏற்றிக் காய்ந்துடன்

கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ

நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
- (மதுரைக் காஞ்சி 370-375)

கடல் பயணத்தில் தமிழர்கள் முன்னோடிகள் அவர்களுடைய தொழில்நுட்பம் அளவிடக்கரியது.

உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு 2 வகை மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

பாறை களில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழற்றி விடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில் நுட்பத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.