திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில், 200 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். காடுகள் வளமாக இருந்த காலம் அது. பாபநாசம், காரையார், சேர்வலாறு போன்ற அணைகளும் இல்லை. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை முழுவதும், தாமிரபரணியில் வெள்ளமாக பெருக்கெடுக்கும்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, சீவலப்பேரி பகுதி மக்கள், தாமிரபரணி ஆற்றை கடக்க, படகுகளை பயன்படுத்தி வந்தனர். ஆற்றங்கரையில் அமைந்த படகு துறையில், எப்போதும், ஆண்கள், பெண்கள், வியாபாரிகள் கூட்டம் மொய்க்கும். எல்லாருக்கும் படகு கிடைக்காது. இடம் கிடைத்தவர்கள் முதலில் அக்கரைக்கு போய், மற்றவர்கள் படகு திரும்பும் வரை காத்திருக்க வேண்டும்.
படகில் தட்டுமுட்டு சாமான்களோடு செல்பவர்களின் பொருட்கள் களவு போனதுடன், ஜாதி சண்டைகளும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. பிரிட்டிஷார் ஆட்சி நடந்த அக்காலத்தில், திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் இருந்த படகு துறையில், ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து, பொழுது போவது ஒரு யுகமாக நடந்து வந்தது.
ஒரு கட்டத்தில் படகு துறையில் நடந்த ஜாதி கலவரம், கொலையில் முடிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என, கருதிய கலெக்டர் தாம்சன், தனக்கு முன் இருந்த கலெக்டர் ஈடன், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது குறித்து, எழுதி வைத்த குறிப்பை படித்தார்.'திருநெல்வேலி- - பாளையங்கோட்டை நகரங்களை இணைக்க, தாமிரபரணி ஆற்றில், 800 அடி நீளத்தில் பாலம் கட்ட வேண்டும். இது அவசரமும், அவசியமும் கூட; இதன் மூலம் குழப்பமும், வன்முறையும் அகலும்.
'திருநெல்வேலி ஜில்லா, எல்லா நிலைகளிலும் வளம் கொழிக்கும்' என, ஈடன் எழுதியிருந்ததை படித்த கலெக்டர் தாம்சன், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அப்போது கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தாராக பணிபுரிந்த, நெல்லையைச் சேர்ந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார்.
பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்,
760 அடி நீளம், 21 அடி அகலம், 11 ஆர்ச்சுகளோடு பாலம் அமைப்பதற்கான வரைபடம் தயாரானது. ஆர்ச்சின் விட்டம், 60 அடியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டை தூண்கள், ரோமானிய அரண்மனை தூண்களை நினைவு படுத்தும் வகையில் அமைக்க முடிவானது. இதை கட்டி முடிக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது. கலெக்டர் தாம்சன், தன்னிடம் சிரஸ்தாராக இருந்த, செல்வந்தர் சுலோச்சன முதலியாரை அணுகினார்.
அக்காலத்திலேயே, கோடீஸ்வரராக இருந்த சுலோச்சன முதலியார், பாலம் கட்டுமானத்தின் முழு செலவையும் தானே ஏற்பதாக தெரிவித்தார். அதன்பின், பாலம் கட்டுமான பணிகள் துவங்கி, மளமளவென நடந்தன.
சிமெண்ட் இல்லாத காலத்தில், சுண்ணாம்புடன் பதனீர், கருப்பட்டி அரைத்து பாலம் கட்டப்பட்டது. பாலப் பணிகளில், சிறையில் இருந்த ஆயுள் கைதிகள், 100 பேரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
பணிகள் முடிந்து, 1843ம் ஆண்டு, நவம்பர் மாதம், பாலம் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட யானை பவனி வர, சுலோச்சன முதலியார், நீதிபதி, கலெக்டர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் சென்றனர். பாலத்திற்கு, நிதியுதவி அளித்த சுலோச்சன முதலியார் பெயரே சூட்டப்பட்டது.
பாலம் கட்டப்பட்டு, 174 ஆண்டுகளை கடந்து, வரும் நவம்பரில், 175வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் பயணித்தாலும், இன்றும் கம்பீரம் குறையாமல், நெல்லையின் அடையாள சின்னமாக காட்சி அளிக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.