14/10/2017

பப்பாளியின் மருத்துவக் குணம்...


17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. மிகவும் இனிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களிலும் பப்பாளி வரத்து இருக்கும். பழுக்காத காய்கள் பச்சை நிறத்திலும், நன்கு பழுத்தவுடன் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்தபின் விதைகள் மிளகு போன்று இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும்.

நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.

பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும், மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் ‘ஏ’ சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் ‘சி’ கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் ‘சி’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் ‘சி’யும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு.

பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதிப் பொருட்கள் (என்சைம்) உள்ளது. இதற்கு ‘பப்பாயின்’ என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

பச்சைக்காயை வேண்டுமானால் சாறாக்கிக் குடிக்கலாம். பழுத்த பப்பாளியை அப்படியே உண்ணலாம். இதை சாறாக்கத் தேவையில்லை. அப்படியே சாறாக்கிப் பயன்படுத்த வேண்டுமானால் கொஞ்சம் பால் அல்லது நீர் கலந்து கொள்ளலாம். புத்துணர்ச்சியை ஊட்டக்கூடியது பப்பாளியின் சாறு.

மருத்துவப் பயன்கள்...

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும், பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில், நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.