13/10/2017

அதிமதுரம்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் பழமொழி...

உடல் பலத்தோடு பொருள் நிறைவு சேரும்போது மனம் மகிழ்ச்சி பெறும். இவ்வுலகில் அனைவரும் விரும்புவதும் வேண்டுவதும் ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வைத்தானே? நல்ல ஆரோக்கியத்துக்கும் அக மகிழ்வுக்கும் அடிப்படையாக விளங்குவது இயற்கை மருத்துவம். நாம் மறந்துவிட்ட இயற்கையையும் இயற்கை நமக்களித்த மருத்துவத்தையும் இங்கே காண்போம்.

அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள்.

அதிக நேரம் இனிப்பது என்பதும் கூட பொருளாகும். அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra.

இது Fabaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகை.

சித்த மருத்துவத்தில் ‘அதிமதுரம்’ என்றும், வழக்கு மொழியில் ‘அதிங்கம்’, ‘அட்டி’, ‘மதூகம்’ என்று வழங்குவர். சமஸ்கிருதத்தில் ‘யுஷ்டிமது’, ‘அதிரஸா’, ‘மதுரஸா’ என்று குறிப்பிடுவர். உருது மொழியில் முலெத்தி என்று கூறுவர். அதிமதுரத்தின் வேர்களே நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை... குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரத்தை உண்ட பிறகு, அது இனிப்பாகவே மாறும் (பிரியும்) இயல்புடையது. அதிமதுரத்தில் 2 வகைகள் உள்ளன

1. சீமை அதிமதுரம்..

சீமை அதிமதுரம் பெருவிரல் கனத்திலும், சிவப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், ஒடித்தால் உட்புறம் மஞ்சள் நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். இந்த சீமை அதிமதுரம்தான் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைப்பது. இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

2. நாட்டு அதிமதுரம்..

நாட்டு அதிமதுரம் சிறியதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் விற்கின்றனர்.

அதிமதுரத்தில் Glycyrrhizin என்ற கிளைக்கோசைடும், Glycyrrhizic acid, Silicones, Sterols, Amino acids, Amine, Isoflavonoids போன்ற தாவரச் சத்துகளும் உள்ளன.அதிமதுரத்தின் பொதுவான செய்கைகள்...

வறட்சியகற்றி (Emollient), உள்ளழலாற்றி (Demulcent), கோழையகற்றி (Expectorant), உரமாக்கு (Tonic) ஆகிய செய்கைகளாகும்.பொதுவாக அதிமதுரத்தினால் கபத்தால் ஏற்படும் கோழை, பித்த மிகுதியால் ஏற்படும் உடல் சூடு, சுவாச காசம், கோழைக்கட்டு, கண் நோய்கள், வெறிநோய்கள், காமாலை, வெப்ப நோய்கள், வெண்புள்ளி (வெண்குஷ்டம்) முதலியன தீரும்.

அதிமதுரத்தால் வறட்டு இருமல் தீரும். அதிமதுரம், மிளகு, திப்பிலி, கடுக்காய் தோல் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து 4 முதல் 6 வராகன் எடை (ஒரு வராகன் எடை: 4.2 கிராம்) அளவு தேனில் குழைத்துத் தரலாம்.

நெஞ்சில் ஏற்படும் கோழைக்கட்டுக்கு அதிமதுரத் துண்டு ஒன்று/இரண்டு வாயிலிட்டு அதன் உமிழ் நீரை விழுங்க வேண்டும்.  அதிமதுரம் நெஞ்சகக் கோளாறுகள், கப நோய்கள் (சீதள நோய்கள்).

நுரையீரல் தொந்தரவுகள், வறட்டு இருமல், காச நோய், சிறுநீரக நோய்கள், தொற்றுநோய்கள், வயிற்றுவலி, வாயுக் கோளாறுகள், சிறுகுடலில் அமில தேக்கத்தினால் ஏற்படும் புண்கள், வயிறு வீக்கம், வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு தனியாகவும் அல்லது பிற மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாக பாகம் செய்தோ வழங்கப்படும்.

அதிமதுரத்தை பொடித்து வெந்நீருடன் கலந்து அருந்த மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டும். அதிமதுரமும் முட்சங்கன் வேரும் சம எடை எடுத்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து தேற்றான் கொட்டை அளவு உருட்டி பசும்பாலில் ஒரு நாளைக்கு இருவேளை என்று கொடுக்க, மஞ்சள் காமாலைக்கும் மருந்தாகும்.

கர்ப்ப காலத்தில் ஏதேனும் ரத்த ஒழுக்கு ஏற்படின், அதிமதுரமும் சீரகமும் சம எடை எடுத்து 350 மி.லி. நீர் விட்டு எட்டில் ஒன்றாக (1/8) காய்ச்சி, காலை, மாலை - 3 அல்லது 4 நாட்கள் தரலாம். அதிமதுர இலைகளை அரைத்து உடலில் அக்குள்களில் பூசி குளித்து வர - கற்றாழை நாற்றம், சொறி, சிரங்கு, தேமல், படை போன்ற சருமப் பிரச்னைகள் தீரும்.

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை, வகைக்கு 1 பங்கு எடுத்துப் பொடித்து, அதனுடன் கொடிவேலி வேர்ப்  பொடி 17 கிராம் சேர்த்து கலந்து கொண்டு தேனில் குழைத்து, அதிமதுர சூரணமாகத்  தர தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

ஜப்பான் நாட்டில் ஈரலுக்கான ஊசி மருந்தில் அதிமதுரத்தின் சத்தும் சேர்க்கப்படுகிறது. அதிமதுரம் ஈரலை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.