சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய்யை ஐதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கரீமின் மனைவி ஜாய்ஸ் ஜோய்க்கு உதவிய தனியார் தேர்வு மையத்தின் இயக்குனர் ராம் பாபுவும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்ற ஷபீர் கரீம் புளூடூத் கருவியை மறைத்து வைத்து காப்பியடித்து சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஐதராபாத்தில் உள்ள அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் உதவியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தெலுங்கானா போலீசாரின் உதவியுடன் அசோக் நகர் கிராஸ் சாலையில் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், புளூடூத், கேள்வித்தாள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களை அடுத்த கட்ட விசாரணைக்கான சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர்.
மோசடி, கூட்டுச்சதி, மோசடிக்கான சதி, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புளூடூத், செல்போனை பயன்படுத்தி காப்பி அடிக்க பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பனியன், சட்டையை ஷபீர் கரீம் அணிந்ததும், அதை அவரின் மனைவி வடிவமைப்பு செய்து கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளாது.
இந்தியாவிலேயே தேர்வு முறைகேட்டில் சிக்கிய முதல் ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரீம் ஆவார். விரிவான விசாரணைக்குப் பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று சென்னை அழைத்து வரப்படும் அவரது மனைவி, ஆசிரியரும் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 7 மாதம் சிறைதண்டனை, அபராதம் உள்ளிட்ட தண்டனையை நீதிமன்றம் வழங்க வாய்ப்புள்ளது
ஐ.பி.எஸ் அதிகாரியே குற்றத்தில் ஈடுபட்டுள்ளாதால், விசாரணையில் எந்த குழப்பமும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். ஷபீர் கரீம், அவரது மனைவி ஜோய் ஆகியோருக்கிடையில் தகவல் பறிமாற்றத்துக்கு பயன்படுத்திய புளூடூத், செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் அறிக்கையை மத்திய குடிமைப்பணி தேர்வு வாரியம் பெற்று, அதன் அடிப்படையில் ஷபீர் கரீம் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.