15/11/2017

தமிழின் பெருமைகள்...

               
உலகில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பழக்கத்தில் உள்ளன. அத்தனை மொழிகளிலும் 6 மொழிகள் தான் உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்த பாரம்பரியம் உடைய மொழிகள்.

அவற்றில் தமிழ், சீனம், அண்மையில் ஹூப்ரு ஆகிய மொழிகள்தான் அறிவியல் யுகத்துக்கும் ஈடுகொடுத்து தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.

பாடம் கற்கிற ஊடகமாகவும், பயன்பாட்டுக்குரிய வாழ்க்கை மொழியாகவும், தமிழ் நமக்கு வாய்த்திருக்கும் பெருமையை இன்னும் முழுமையாக நாம் உணரவில்லை.

ஆனால் உலகம் நன்றாக உணர்ந்திருக்கிறது. ஒரு மாநிலத்திற்குரிய மொழியாக இல்லாமல் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பேசும் உலக மொழியாகவே, சர்வதேச அளவில் தமிழ் மதிக்கப்படுகிறது.

அதற்கு சாட்சியாக உலகம் முழுவதும் 40 மொழிகளில் தனது ஒலிப்பரப்பைச் செய்கிற பி.பி.சி நிறுவனம் இந்திய மொழிகளில்  தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே ஒலிபரப்பைச் செய்கிறது..

42 மொழிகளில் ஒளிபரப்புச் செய்யும் சீன வானொலியும் இந்த இரண்டு மொழிகளுக்கு மட்டும் பெருமையளிக்கிறது.

சர்வதேச மொழிகளில் வெளியாகும் யுனெஸ்கோ கூரியர் பத்திரிக்கை இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியாகிறது.

உலக வரைபடத்தில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவே இருக்கிறது.

ஜெருசலத்தில் உள்ள ஒலிவமலை தேவாலயத்தில் 68 மொழிகளில் எழுதப்பட்டுள்ள ஏசு அருளிய ஜெபம், இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில், தமிழ் வருடங்கள் அறுபதையும் குறிக்கும் வகையில் படிக்கட்டுகளுக்கு பிரபவ முதல் அட்சய வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன..

இன்று சர்வ வல்லமை பெற்றுள்ள இணைய தளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், பயன்பாட்டு மொழியாக இந்திய மொழிகளில், ஏறத்தாழ தமிழ் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமைப்படத்தக்கது..

செம்மொழி :

காலத்தால் அளவிட இயலாத தொன்மை வாய்ந்த தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று பிரிவுகளாக வளர்ந்துள்ளது.. பல்வேறு வரிவடிவங்களைப் பெற்று, வளர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மொழிகளை உருவாக்கி இன்று செம்மொழி எனும் அடைமொழியும் பெற்று இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி எனும் பெருமை அளவிட இயலாதது..

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் குகைகளிலும், கற்ப்பாறைகளிலும் கல்வெட்டாகவும், பின்னர் செப்புத் தகடுகளிலும், அதன்பின் எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த தமிழின் வரிவடிவம் 1930-க்குப் பின் காகிதங்களிலும் அச்சிடப்பட்டு வருகிறது.

மேலும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து கணிணி பயன்பாட்டிலும் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது...

தாய் மொழியாம் தமிழ் வழிக்கல்வி இன்னும் தமிழை வளர்க்கும் என்பது தெள்ளத் தெளிவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.