(தமிழ் வரலாற்றடிப்படை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்...
8. தமிழ் வரலாற்றடிப்படை...
மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1908 - லேயே,
வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரை (Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும்.
விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்து வருகின்றது.
இங்குள்ள மக்களுட் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடு களையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர்.
இங்குக்கூட, வரலாற்றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான்.
எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும்.
அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும் என்று எழுதினார்.
இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி, குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார்.
அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்று கின்றேன் என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.
குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சியாளரி டைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று.
குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது.
ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மை யினாலும், தமிழரின் சொலமாட்டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சி யினாலும், மேலையர் இன்னும் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிலர்.
அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப்படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடைபெற்று வருகின்றது.
இவற்றை அறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடை யுண்மையாலும், ஆராய்ச்சி யில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர்.
மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரிநாட்டுத் தமிழிலக்கண நூலாரேயென்றும், மொழியமைப்பில் தமிழுக் கொப்பானது வேறெம்மொழியும் இவ் வுலகில் இல்லையென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்கவேண்டியவ ரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகு மென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவை யாதலின் விலக்கும் வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக் கருவியும் பயன்படா தென்றும் அறிதல் வேண்டும்.
சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப் பிள்ளை, தவறான அடிப்படைகொண்டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபுகொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8ஆம் நூற்றாண்டினதாகக் காட்டி விட்டர்.
ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டு செல்லும்.
இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங் காலத்திற்குப்பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது.
வாழை, தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், 'வாழைப்பூ' என்பதுபோல் 'தாழைப்பூ' என்று வராது. Patrimony என்பதற் கொத்த பொருள் matrimony என்னுஞ் சொற்கில்லை.
இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது.பேரா.சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற்காலக் கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலுந்தான் பயன்படுமேயொழிய, மாந்தனுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக்கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும் பயன்படாவென அறிக.
ஆகவே, கருவிகொண்டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (Guess work) என்றும் கூறுவது அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும்.
விரல் என்னும் பெயர் விரி என்னும் வினையினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும் திரிந்துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல்லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்துவிடுகின்றது.
அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண் மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனையோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலையென்று தள்ளிவிட முடியாது.
இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கை யிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளையெல்லாங் கண்டு, வரலாறு, மாந்தனூல் (Anthropology), ஞாலநூல் (Geography), நிலநூல் (Geology), உளநூல் (Psychology) முதலிய அறிவியல்களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும். கீற்றும் (Skeat), வீக்கிலியும் (Weekley), சேம்பர்சு (Chambers) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித் துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல.
ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவர் வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும்.
குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்றவரேனும், எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார்; அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்தவராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும்.
தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத்திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட்டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமஸ்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக்கொண்டதாகுமாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட்டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத்தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப்பட்ட தென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (S.K.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (V) இராகவனாரும், 1952-ல் வெளிவந்த 'நந்தமோரியர் காலம்' (Age of Nandas and Mauryas) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (Language and Literature) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (Crete) தீவில் 'தெர்மிலை' (Termilai) என்றும், சின்ன ஆசியாவின் (Asia Minor) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (Lycia) 'த்ர்ம்மிலி' (Trmmili) என்றும் இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் 'த்ரமிட' அல்லது 'த்ரமிள' என்றும், பின்னர்த் 'த்ரவிட' என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப் பெயர் அவர் வாயில் 'தமிழ்' என மாறிற்றென்றும், அவர் மொழியி லிருந்த g j d d b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (Voiced stops) k ct t p என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (Voiceless stops) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர்.
ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்கா வொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம்.
இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான kanna, surigx, (surigg), mastix (mastigos) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச்சொற்களின் மூலமென்று, தலை கீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும்.
இதன் விளக்கத்தை என் 'வண்ணனை மொழிநூலின் வழுவியல்' என்னும் நூலிற் காண்க.
தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, (P.T.) சீநிவாசையங்கார் எழுதிய Stone Age in India, History of the Tamils என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Origin and Spread of the Tamils. Pre-Historic South India என்னும் நூல்களையும் படித்துணர்க...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.