17/12/2017

மோடியின் ஆட்சிமுறை பிடிக்கவில்லை - ராஜினாமா செய்த பாஜக எம்.பி...


மோடியின் ஆட்சி முறை பிடிக்காததால் பாஜக எம்பி கட்சியிலிருந்தும், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பந்த்ரா கோண்டியா தொகுதியில் மக்களவை உறுப்பினர் நானா பட்டோலி. இவர், ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அரசு விவசாயக் கடன் குறித்தும், விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு பிரதமர் மோடி குறித்து விமர்சித்த நானா பட்டோலி, பிரதமர் தம்மை நோக்கி கேள்விகள் எழுப்பப்படுவதை விரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட இவர் மோடியின் ஆட்சி முறை தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பட்டோலி, பாஜகவில் இணைந்து மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவுடன் இணைந்து விவசாயிகள் நலனுக்காக குரல் கொடுத்தார்.

குஜராத் தேர்தல் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், பாஜக எம்.பி. ஒருவர் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து விமர்சித்து கட்சியிலிருந்து விலகியிருப்பது, பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.