சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார்.
முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.
எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது.
அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்..
ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது..
அதிர்ச்சி
மறுப்பு
கோபம்
பேரம்
மனச்சோர்வு
சோதித்து பார்த்தல்
ஏற்றுக்கொள்ளுதல்
இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்..
உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை
(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)
தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்..
இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..
அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”
கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா..
மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்
ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்
உதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர் விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்.
இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.
மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”
கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”
மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
சோதித்தல் : ”விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”
மூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.
பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
கோபப்பட்டால் மூன்றாவது நிலை
அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை.
முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.