15/01/2018

உடல் பருமனாவதும் இளைப்பதும் உணவால் அல்ல – நாம் சுவாசிக்கும் குணத்தால் தான்...


நம் வாழ்க்கையில் எல்லோரும் நல்லதையே தான் எண்ணுகின்றோம். நல்லதாக நடக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.

ஆனால் பிறருடைய தவறான செய்கைகளைப் பார்க்கும் போது வேதனையான உணர்வுகள் வந்து நம் நல்ல உணர்வுகள் எல்லாம் விளையாமல் போகின்றது. இது தீய வினையாக நமக்குள் சேர்த்து நோயாக விளைகின்றது.

இப்படி வினைக்கு நாயகனாக எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடம்பை நலியச் செய்கின்றது.

சந்தோஷமாக இருந்தால் உடலை மகிழ்ச்சியுறச் செய்யும்.

சில பேரைப் பாருங்கள்...

1.அவர்கள் சாப்பாடு கொஞ்சம் தான் சாப்பிடுவார்கள்.

2.ஓரளவுக்கு கொஞ்சம் செல்வாக்கோடு இருந்தார்கள் என்றால் அந்த உடல் நன்றாக வரும்.

ஆனால் சிலரைப் பார்த்தால் இயல்புக்கு மாறாக நிறையவே சாப்பிடுவார்கள்.. அவர்கள் உடலைப் பார்த்தோம் என்றால் மெலிந்து கொண்டே போகும்..

1.சாப்பிடும் சாப்பாட்டால் உடல் வருவது அல்ல.

2.மகிழ்ச்சியினால் தான் உடல் பூரிப்பாகவும்.

3.கவலையும் வேதனையும் இருந்தால் உடலை மெலியச் செய்கின்றது.

ஒருவர் கோபமாகவே இருப்பார். அவர்களுக்கு மகிழ்ச்சி அதிலே தான் இருக்கும். அவன் அப்படி இவன் இப்படி என்று சொல்லிவிட்டு அவர்களும் நன்றாகத் தான் இருப்பார்கள்.

ஆனால் கோப உணர்ச்சியால் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை எதிர்ப்பதற்கு யாராவது வந்தார்கள் என்றால் அடுத்து வேதனை என்ற நிலைகள் கண்டிப்பாக வரும்.

அப்புறம் இவர் உடலில் சிறுகச் சிறுக..

1.இப்படிச் செய்கிறானே... என்னையே எதிர்க்கிறானே... என்று குரோத மனம் தான் வரும்.

2.அவனை விடக்கூடாது அழித்தே ஆகவேண்டும் அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான்.

3.இந்த உணர்வு இவன் உடலுக்குள் இருக்கின்ற நல்ல உணர்வையெல்லாம் அழிக்கும்.

இந்த உணர்வுகள் இப்படிச் சேர்த்துச் சேர்த்து கோப உணர்வுகள் தன்மை எல்லை கடந்தாலும் அதே சமயத்தில் அது எதிர் நிலையான நிலை வரும் போது இந்த வேதனை கூடியவுடனே உடலும் குறையத் தான் செய்யும்.

இப்படித்தான் நமக்குள் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப சிறுகச் சிறுக அந்தந்த குணத்தின் வினைகளாகச் சேர்ந்து அதற்குத்தக்க உடல் செழிப்பாவதும் உடல் நலிவதும் மாற்றங்கள் ஆகிக் கொண்டே வரும்.

அதனால் தான் முச்சந்தியிலே வைத்து வினைக்கு நாயகன் “விநாயகன்” என்று காட்டுகிறார்கள்.. நீ சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப உன் உடலை நாயகனாகப் பெற்றிருக்கிறாய் என்று எல்லோரையும் அறியும்படி ஞானிகள் வைத்துள்ளார்கள்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகா ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து விண் செல்லப் போகிறாயா...?

அல்லது மீண்டும் உடல் பெறும் உணர்வுகளை உனக்குள் வினையாகச் சேர்த்து மீண்டும் மண்ணுலகில் வாழப் போகிறாயா..?

நீயே சிந்தித்துப் பார்... என்று கேள்விக் குறி போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள். ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் தப்பல்ல. அதை அறிந்து கொண்டால் நாம் போக வேண்டிய பாதை தெளிவாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.