உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிறது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவன். பள்ளிக்கு சைக்கிளில் செல்ல விரும்புகிறான். என்ன செய்வீர்கள்? அதட்டுவீர்கள். 'வேண்டாம். பயங்கர டிராபிக். ஏதாவது வண்டி மோதுனா என்ன பண்றது. ஸ்கூல் வேன்ல போ. இல்லைனா அப்பா வேணும்னா கொண்டு வந்து விடவா' என செல்லம் கொஞ்சுவோம் அப்படித்தானே. அப்படி வேனிலோ, இரு சக்கர வாகனத்திலேயோ மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதே நமக்கு பெரிய டென்ஷன். 'லேட் ஆயிடுச்சு. அப்புறம் கேட்டுக்கு வெளியேதான் நிக்கணும்'னு மாணவர்களுக்கும் டென்ஷன். குழந்தைகள் பள்ளி செல்வது என்பது நமக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய டென்ஷன் தான்.
ஸ்மார்ட் ஸ்கூல், ஏசி பஸ், நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என நமக்கு எல்லாம் கிடைக்கிறது. பெரிய தொலைவு இல்லாமல் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க முடிகிறது. ஆனால் இப்படி போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத ஊர்களில் மாணவர்களின் நிலை என்ன? அப்படி ஒரு கிராமம் தான் கோவை காரமடை அருகே வனப்பகுதில் அமைந்துள்ள பூச்சமரத்தூர் கிராமம். இங்கு 25 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஆனால் வெளி உலகுக்கான தொடர்பை அற்று தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது இந்த கிராமம். சுற்றிலும் காடு, நகரத்துடனான தொடர்பை துண்டிக்கும் ஆறு இவைதான் இந்த ஊரின் அடையாளங்கள்.
ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டும் என்றால் கூட இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். பாலங்கள் இல்லை. ஆற்றில் பெரு வெள்ளம் வந்தால் பல கிலோ மீட்டர் சுற்றித்தான் நகரத்தை அடைய முடியும். இந்த கிராமத்தில் இருந்து சில மாணவர்கள் தினமும் பள்ளி சென்று வருகிறார்கள். வீட்டில் இருந்து சிறுதூரம் நடந்து, அங்கிருந்து பரிசல் பயணம், பின்னர் மீண்டும் சிறு நடை, அங்கிருந்து பேருந்து என விரிகிறது இவர்களின் பள்ளியை நோக்கிய பயணம். இத்தனை கஷ்டமா என்கிறீர்களா? இன்னும் இருக்கிறது பரிசலை இயக்குபவர்களே இவர்கள்தான்.
நாம் அந்த கிராமத்துக்குச் சென்றிருந்த போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நகரத்தின் பேரிரைச்சலில் இருந்து அமைதியான அந்த கிராமத்தை அடைந்திருந்தோம். பில்லூர் அணை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றது. பஸ்சில் இருந்து ஒரு மாணவி உட்பட 4 அரசு பள்ளி மாணவர்கள் இறங்கினர். கற்கள் நிறைந்த சாலையில் பயணிக்கத்துவங்கினார்கள். பள்ளியில் அன்று நடந்ததை பேசி சிரித்தபடியே மேடு-பள்ளம் நிறைந்த அந்த சாலையில் மிக கவனமாக பயணித்தனர்.
ஒரு பெரிய ஆலமரத்தை கடந்து பள்ளத்தில் இறங்க... அங்கு ஆறு. ஆற்றை பார்த்ததும் நமக்கு இருந்த அச்சமும், ஆச்சரியமும் அவர்களுக்கு சுத்தமாக இல்லை. மாணவர்களுள் ஒருவன் ஒரு மரத்தின் பின்னால் இருந்த ஃபைபர் பரிசல், துடுப்பை எடுத்து வந்தார். மிக சாதாரணமாக படகை ஆற்றின் கரையில் வைத்து மற்ற மாணவர்கள் ஏறச்சொல்லி, அந்த மாணவனும் பரிசலில் ஏறினார். இடது வலதாக துடுப்பை இயக்க, படகு மறுகரையை நோக்கிச் சென்றது.
'நாங்க 6 பேர் சார். இப்படித்தான் தினமும் பரிசல்ல போவோம். அதெல்லாம் பயமில்லை. ரொம்ப வெள்ளம் வந்தா ஸ்கூலுக்கு போக மாட்டோம்' என நாம் கேட்ட அத்தனை கேள்விக்கு ஒற்றை ஒற்றை வார்த்தையாகவே பதில் சொன்னார்கள் மாணவர்கள்.
அங்கிருந்த மக்களிடம் பேசினோம். 'தினமும் இந்த பசங்க ஸ்கூலுக்கு இப்படித்தான் போறாங்க. வீட்டுல இருந்து ஆற்றங்கரைக்குப்போய் பரிசல்ல துடுப்பு போட்டு அந்த கரைக்கு போகணும். அங்கிருந்து கவர்மென்ட் பஸ்சை புடிச்சு மறுகரைக்கு போய் அங்கிருந்து பஸ்ல ஸ்கூலுக்கு போவாங்க. சாய்ந்திரமும் இது தான்' என்றார்கள்.மறுபுறம் இதே ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்கிறார்கள் சுற்றுலா பயணிகள். அச்சத்தோடு, 'லைஃப் ஜாக்கெட்' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு பயணிக்கிறார்கள். மாணவர்களிடம் ஆறு மீதான அச்சமும் இல்லை. அவர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை.
குழந்தைகளை எப்படியெல்லாம் நடந்து கொள்வது, சிறப்பான குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து நாம் தேடி தேடி அறிந்து குழந்தைகளை மிக கவனமாய் பாதுகாத்துக்கொண்டிருக்கிற இதே காலத்தில், பள்ளி செல்ல இத்தனை சிரமங்களை சந்திப்பது என்பது மனதை பிசையத்தான் செய்கிறது.
நாம் கல்வி கற்பது என்பதே மிகப்பெரிய பிரச்னையாக பார்க்க பழகி இருக்கிறோம். ஆனால் பள்ளிக்கு செல்வது என்பதே இவ்வளவு பிரச்னையா என்பது அதிர்ச்சியளிக்கவே செய்கிறது. ஆனால் இதை சாதாரண பயணமாகவே கருதுகிறார்கள் அவர்கள். நமக்குதான் இது பெரிய சாதனையாக மலைக்க வைக்கிறது. ஆனால் நாம் நினைப்பதுபோல் இது சாதனை அல்ல... சாபம். அடிப்படை உரிமையான கல்வியை கற்க இந்த குழந்தைகளை இத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல...
- காரிடிவி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.