அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலின் உந்துவிசை இயந்திரப் பிரிவினுள் (Propulsion compartment) தண்ணீர் புகுந்ததே பழுதிற்கு காரணமாம். இயந்திர அறையின் கதவைச் சரியாக பூட்டாததன் காரணமாகவே அதனுள் தண்ணீர் புகுந்து விட்டதாக இந்து பத்திரிகை தெரிவிக்கிறது.
அரிஹந்த்துக்கு துணையாக ரசியாவிடமிருந்து குத்தகையாகப் பெற்றுள்ள ஐ.என்.எஸ் சக்ரா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் அரிஹந்த் பழுதாவதற்கு முன்பே செயல்படாத நிலையில் உள்ளது. இக்கப்பலில் உள்ள ஒலி வீச்சளவுக் கருவி (Sonar Dome) விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நுழையும் போது இடித்துக் கொண்டதில் சேதமடைந்துள்ளது.
இந்திய கடற்பாதுகாப்பிற்கு போர்தந்திர ரீதியில் வலுவூட்டி வந்த அரிஹந்த் நீமூழ்கிக் கப்பல் தான் அணு ஆயுத ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் ஆற்றல் பரிசோதிக்கப்பட்ட ஒரே நீர்மூழ்கிக் கப்பல் என இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் பெருமையுடன் குறிப்பிடுவார்கள். கடந்த 2016 அக்டோபரில் தான் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்த் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2009 -ம் ஆண்டு வெள்ளோட்டமிடப்பட்டு, பல்வேறு சோதனைகளை செய்து வந்த அரிஹந்த் கப்பல் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக தொழிநுட்ப பிரச்சினைகளையே சந்தித்து வந்துள்ளது.
இந்த லட்சணத்தில் எதிர்காலத்தில் மேலும் ஐந்து அரிஹந்த் கப்பல்களைக் கட்ட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தரைதட்டி நிற்கும் அரிஹந்த் கப்பலைக் கட்ட 14,000 கோடியும் 30 ஆண்டுகளும் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய சீன எல்லைத் தகராறு தோன்றிய நிலையில் தான் ஆட்சித் தலைமையில் உள்ளவர்களுக்கு நீர்மூழ்கிக் கப்பல் தரைதட்டி நிற்கும் கவனத்துக்கு வந்துள்ளது என ‘தேசபக்தியுடன்’ தி இந்து குறிப்பிட்டுள்ளது.
இப்போதும் கூட இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் சீனா குறித்த பரபரப்புச் செய்திகளை தொடர்நது வெளியிட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் தளபதியே சீனாவை வெல்வோம் என சினிமாவில் விஜயகாந்த் மிரட்டுவது போல பேசுகிறார். ஆனால் இவர்களது பலம் என்ன,திறமை என்ன என்பதை ஒக்கி புயலிலேயே பார்த்து விட்டோம். கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்ற தைரியமற்ற இந்த சிங்கங்கள்தான் நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்பதற்கு எது அளவுகோல்?
கோடிக்கணக்கில் வறுமையில் வாடும் மக்களையும், பாதாளத்தில் பாயும் பொருளாதாரத்தையும் வைத்துக் கொண்டு ‘போட்டிக்கு பிள்ளை பெற்ற கதையாக’ இராணுவத்துக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினால் அது இப்படித்தான் சந்தி சிரிப்பதாக அமையும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.