பழநி - கொடைக்கானல் சாலையில் கோம்பைபட்டி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், பழநி - கொடைக்கானல் சாலையில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் உயரத்தில் கோம்பைக்காடு பகுதி உள்ளது. இங்கு பளியர் குடியிருப்பு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னி முத்து, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பழங்குடி பளியர் இனத்தவர் வரைந்த பழங்கால பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நவீன தொல்லியல் ஆய்வு நெறிமுறைகள் மற்றும் வழி காட்டுதலின் படி இந்த ஓவியங்ள் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டவை என வரையறுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறியதாவது...
இந்த ஓவியங்கள் பளியர் குடியிருப்பு மேல் புறம் உள்ள குகை போன்ற அமைப்புடைய பாறைகளில் வரையப்பட்டுள்ளன. ரத்த சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், தற்போது மங்கி செங்காவி நிறமாக உள்ளன. இவை அழியும் நிலையில் உள்ளன. சில ஓவியங் கள் முற்றிலும் அழிந்துவிட்டன.
ஒரு ஓவியத்தில் ஒரு விலங்கின் மேல் 2 மனிதர்கள் அமர்ந்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது. மற்றொரு ஓவியத்தில் ஒரு மனிதனின் தோள் மீது மற்றொரு மனிதன் ஏறி நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மனிதன் தனது வலது கையில் கோடாரியை ஏந்தியிருப்பது போன்றும், அந்த மனிதனின் காலடியில் மற்றொரு மனிதன் வீழ்ந்து கிடப்பது போன்றும் வரையப்பட்டுள்ளன. அடுத்த ஓவியத்தில் ஒரு நீண்ட கோட்டின் இரு புறமும் சூலம் வரையப்பட்டுள்ளது. சூலம் என்பது சைவ வழிபாட்டை குறிக்கும் சின்னம்.
இந்த சின்னம் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு சடங்குகள் தொடர்பானவையாகும். மற்றொரு ஓவியம் மனிதனின் கை ஓவியம் ஆகும். செங்காவி குழம்பில் கையை பதித்து, அந்த கையை பாறைகளில் பதியவைத்தது போல் உள்ளது.
இது போன்ற ஓவியங்கள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. 40 ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓவியங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.