சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் செய்தபோது அரசு பஸ் குறுக்கிட்டதால் ஓட்டுநரை வழக்கறிஞர்கள் சிலர் அடித்து உதைத்தனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தில் ஓட்டுநர் செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக 6 வழக்கறிஞர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று அவர்களை கைது செய்தனர்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இதற்கு திருப்பத்தூர் சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு பிரிந்து செல்லும் புதூர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி, சிவகங்கை வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் பேருந்து நிலையம் முன் சாலை மறியல் செய்தனர். அப்போது திருச்சியில் இருந்து பரமக்குடி செல்லும் அரசு பஸ்ஸை ஓட்டுநர் செல்வராஜ்(55) ஓட்டிச் சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வழக்கறிஞர்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பஸ்சை இயக்கியதால் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தங்கப்பாண்டியன் கீழே விழுந்து காயமடைந்தார்.
ஓட்டுநர் மீது தாக்குதல்...
இதனால் ஆத்திரமடைந்த மற்ற வழக்கறிஞர்கள் பஸ் ஓட்டுநர் செல்வராஜை சட்டையைப் பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அவரது சட்டை கிழிந்தது. அத்தோடு பரமக்குடிக்கு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். பின்னர், பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற செல்வராஜ், கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். மயங்கிய நிலையில் இருந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு சேர்த்தனர்.
ஜாமீனில் விடுதலை...
சிவகங்கை நகர் போலீஸார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், முறையற்ற தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் தங்கப்பாண்டியன், வழக்கறிஞர்கள் ராஜாராம், செந்தில்குமார், மதி, வீரசிங்கம், வால்மீகி ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். இவர்கள் சிவகங்கை ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி லலிதா ராணி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இவர்களை ஜாமீனில் விடுவித்தார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.