25/02/2018

கேரள அரசே.. மலையாள இனவெறியன் கிருஷ்ணன் குட்டி மீது நடவடிக்கை எடு...


தமிழக அரசு தண்ணீர் தர மறுப்பதாக பொய்யான தகவலைக் கூறி,  கேரளாவைச் சேர்ந்த ஜனதாதளம் கட்சியைத் சார்ந்த சித்தூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் குட்டி என்பவர் சாலை மறியல் நடத்தி, தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி வருகிறார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து வருடம் தோறும் ஒப்பந்த அடிப்படையில் 7.25 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது.

தற்போது அப்பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் வருடம்தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விடுகிறது. இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீர் தான் வழங்க வேண்டும். இதற்கு மே மாதம் வரை கால அவகாசம் இருக்கிறது.

ஆனால் அந்த ஒன்றே முக்கால் டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில், தமிழக வாகனங்களை மறித்து போராட்டம் நடத்துவேன் என்றும் கேரள மாநிலம் சித்தூர் தொகுதி ஜனதா தளம் எம்.எல்.ஏ.வான  கிருஷ்ணன் குட்டி அறிவித்தார்.

தற்போது கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு ஆட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.

 இவர் நேற்று நள்ளிரவு முதலே சனதாதளம் கட்சியினரையும், சில குண்டர்களையும்  திரட்டி தமிழக எல்லையை மறிக்க ஆரம்பித்தார்.

பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் வழியாக பாலக்காடு செல்லும் சாலையிலும், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சி புரம் வழியாக திருச்சூர் செல்லும் கேரள எல்லை பகுதியிலும்  சாலையில் அமர்ந்து இவனது கட்சியினர் தமிழக வாகனங்களை கேரளாவுக்குள் நுழைய விடாமல் மறித்தனர்.

இதனால் கேரளாவுக்கு காய்கறி, பால் ஏற்றி சென்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

மேலும், இந்தப் போராட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த 4 வாகனங்களின் கண்ணாடிகளை சனதா தள குண்டர்களால்  உடைக்கப்பட்டன.  இரு மாநில காவல்துறையினரும்  எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். . தமிழக வாகனங்களை கேளராவுக்கு செல்ல விடாமல் தமிழக  காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

நேற்று இரவு விடிய, விடிய  நடைபெற்ற போராட்டம்  இன்று இரண்டாவது  நாளாக  நீடித்து வருகிறது. இதனால் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

தமிழர்களின் முல்லைப் பெரியாற்று அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும், கம்யூனிஸ்டு், காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அதனை ஏற்க மறுத்து வருகின்றன. அணை உடைந்து விடும் என்று கூறியே 30 ஆண்டுகளாக 136 அடிக்கு மேலே உயர்த்த மறுத்து வருகின்றன.

ஆனால் கேரளாவிற்குச் செல்லும் ஆழியாற்று நீரை எப்போதும் தமிழகம் மறுத்ததில்லை. மழை குறைவு காரணமாக 5.5  டி எம்.சி.  வரை நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும் 1.75 டி.எம்.சி. தான் நிலுவவையாக உள்ளது.

 இந்த உண்மை தெரிந்திருந்தும் கிருஷ்ணன் குட்டி தமிழகம் நீர் தர மறுப்பதாகக் கூறி, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.  தமிழர்கள் மீது மிகப் பெரிய  கலவரத்தை தூண்டி விட  முயன்று வரும் கிருஷ்ணன் குட்டி மீது கேரள அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.