23/02/2018

கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை...


கர்நாடக தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி வரும் 25-ம் தேதி தமிழ் அமைப்பினர் பெங்களூருவில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் ராசன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது...

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், ஷிமோகா உட்பட பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்திய அரசமைப்பு சட்டத்தில் மொழி சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ள பல உரிமைகளை கர்நாடக அரசு தமிழர்களுக்கு வழங்க மறுத்து வருகிறது.

கோகாக் அறிக்கை விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை, காவிரி கலவரம் உள்ளிட்டவற்றால் 10-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோரின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு, அகதி யாக தமிழகத்துக்கு இடம் பெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

அண்மைகாலமாக உள்ள தமிழ்ப் பெயர் பலகைகளையும், தமிழ்த் திரைப்படங்களின் சுவரொட்டிகளையும் கன்னட அமைப்பினர் அகற்றி வருகின்றனர்.

அதிலும் பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூருவில் நூற்றாண்டுகளை கடந்த கோயில்களின் தமிழ் கல்வெட்டுக்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளுவர் தின பேரணி தொடர்பாக ஒலிப்பெருக்கியில் தமிழில் அறிவிப்பு செய்த தங்கவயல் கவிஞர் தென்னவனை மிரட்டியுள்ளனர்.

இத்தகைய சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மொழி சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் தமிழ் அமைப்புகளின் சார்பாக வரும் 25-ம் தேதி பெங்களூருவில் ‘தமிழர் பாதுகாப்பு பேரணி’ நடத்துகிறோம்.

பெங்களூரு தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினரும், முற்போக்கு கன்னட அமைப்பினரும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவின் முக்கிய சாலைகளின் வழியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே இரத்தானம் முகாம் நடத்தினால் ஒற்றுமை உருவாகும் என்று சொன்ன பரமக்குடி அரிமா சங்கத்தலைவரு எங்கடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.