சென்ற பதிவின் முடிவில் நாம் இந்தியா முழுவதும் அசோகர் புத்த மதத்தினை பரப்புவதைக் கண்டோம்.
பலி வேண்டாம்... எல்லா உயிர்களும் ஒன்றே.. என்ற புத்த மதத்தின் கோட்பாட்டின் காரணமாக வேள்வி மற்றும் பலிகளை நம்பியே வாழ்ந்து வந்த ஆரியர்கள் திகைக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கின்றனர்.
அவர்கள் என்ன செய்தனர் என்பதனை நாம் காணும் முன் அக்காலம் ... அதாவது கிமு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் கண்டுவிடலாம்.
மௌரிய பேரரசு கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே பரவி இருந்தது. சந்திர குப்த மௌரியன் தொடங்கி வைத்த அந்த பேரரசு அசோகரின் கீழ் அதன் உச்ச நிலையினை அடைந்து இருந்தது. ஆரியர்களின் செல்வாக்கு வடக்கே மிகுந்து இருந்தது (சந்திர குப்தனின் ஆசிரியராகவும் பின்னர் அமைச்சராகவும் சாணக்கியன் என்ற ஆரியன் இருந்ததினை நோக்குக).
இந்த நிலையில் தான் கலிங்க யுத்தத்திற்கு பின்னர் அசோகனின் மனம் மாறுகின்றது. அசோகன் போரில் இருந்த நாட்டத்தினை மறந்து புத்தத்தின் பால் நாட்டம் கொள்கின்றான். பலிகள் கூடாது என்று புத்தம் சொல்கின்றது. எனவே அசோகனும் பலிகள் கூடாது என்கின்றான். அரசன் கட்டளையினை இட்டப் பின்பு மக்கள் கேட்காமலா இருப்பார்கள். மக்களும் பலிகள் வேண்டாம் என்கின்றார்கள். மௌரியப் பேரரசு முழுவதுமே புத்தம் பரவுகின்றது. நிற்க. இது வட இந்தியாவின் அன்றைய நிலை.
இப்பொழுது அக்காலத்தில் தென் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் சற்றுக் காண்போம்.
வடக்கே என்னத்தான் மௌரிய பேரரசு இணையின்றி விளங்கிக் கொண்டு இருந்தாலும் அதற்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக தெனிந்தியாவில் இரண்டு பேரரசுகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ஒன்று சோழப் பேரரசு... இன்னொன்று பாண்டியப் பேரரசு. அப்பேரரசுகள் மௌரிய பேரரசிடம் வணிகத் தொடர்பினை மட்டுமே வைத்து இருந்தன. தெற்கில் இருந்து வணிகர்கள் வடக்கே செல்வதும் வடக்கே இருந்து தெற்க்கே வருவதுமாக இப்பேரரசுகளிடையே வணிகம் நன்றாக நடைப் பெற்றுக் கொண்டு இருந்ததாக அசோகனின் கல்வெட்டுகளும் பல இதர சான்றுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.
எனக்கு ஒன்று பிடிப்படவில்லை, ஏன் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வரலாற்றின் மீது அதிகமாக அக்கறை காட்ட மறுக்கின்றார்கள்?. அசோகனின் வரலாற்றையும் சந்திர குப்தனின் வரலாற்றையும் ஆராயும் அவர்கள், அப்பேரரசர்களின் காலத்திலையே அவர்களுக்கு கட்டுப்படாமல் இயங்கி வந்த தமிழ் அரசர்களைப் பற்றி ஏன் ஆராய மறுக்கின்றார்கள். வட இந்தியா முழுவதையுமே வென்ற அந்தப் பேரரசர்கள் ஏன் தெற்கில் அவர்களது செல்வாக்கினை காட்டவில்லை என்றக் கேள்வி அந்த வரலாற்று ஆசிரியர்களின் மனதினில் எழாமலா இருந்து இருக்கும்?. அதுவும் ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வரை எந்த இனமும் எந்த பேரரசும்... அது அசோகனாக இருக்கட்டும், முகலாயர்களாக இருக்கட்டும், தேவராயராக இருக்கட்டும், தென் இந்தியாவினை முழுமையாக போரிட்டு வெல்ல முடியவில்லையே. அது ஏன் என்றக் கேள்விக்கு அவர்கள் ஏன் விடையினைத் தேடவில்லை என்பது தான் எனக்கு பிடிப்படவில்லை. சரி அது இருக்கட்டும். நம் வரலாற்றுக்கு நாம் மீண்டும் வருவோம்.
மௌரிய பேரரசிற்கு கட்டுப்படாமல் சோழனும் பாண்டியனும் தெற்க்கே ஆண்டு வருகின்றார்கள். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்தது போல் அவர்கள் நாகரீகத்திலும் கலைகளிலும் சரி சிறந்து விளங்குகின்றனர். அறிஞர்களின் கணிப்புப்படி அக்காலத்தில் கடைச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றது. தமிழ் மேலும் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது.
மக்களுள் தொழில் அடிப்படையில் சாதிகள் இருக்கின்றன. அந்தப் பிரிவுகள் கலை முன்னேற்றதிற்க்காகவும் தொழில் முன்னேற்றதிற்க்காகவுமே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
அதாவது, இன்று எப்படி மருத்துவம் பயின்றவர்கள் மருத்துவன் என்று ஒரு பிரிவாகவும், விஞ்ஞானம் பயின்றவர்கள் விஞ்ஞானிகள் என்று ஒரு பிரிவாகவும், பொறியியல் படித்தவர்கள் பொறியாளர்கள் என்றும், பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள் என்றும் பலப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனரோ அதேப் போல் அன்று,
பள்ளமான விவசாய நிலங்களில் நன்றாக வேலை செய்து விவசாயத்தினை வளர்த்தவர்களை 'பள்ளர்கள்' என்றும்,
பறை அறைந்து மக்களுக்கு செய்திகளை தெரிவித்த செய்தி தொடர்பாளர்களை பறையர்கள் என்றும்
இசைக் கருவிகளான பாணங்களை இசைத்து இசைத் தமிழ் வளர்த்த தமிழர்களை பாணர்கள் என்றும்
அது போன்று மேலும் பல சிறப்பு மிகுந்த தொழில்களைச் செய்த மக்களுக்கு அவர்களின் தொழில் அடிப்படையில் துறைகளை ஒதுக்கி மேலாண்மைத் துறையில் சிகரங்களைக் கண்டார்கள் தமிழர்கள். இந்தப் பிரிவுகள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தனவே அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல.
அவர்கள் அனைவரும் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி தமிழகத்தில் வாழ்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர்.
இக்காலத்தில் தான் வடக்கே அசோகன் புத்தத்திற்கு மாறுகின்றான். ஆரியர்கள் என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.
இப்பொழுது ஒருக் கேள்வி,
நீங்கள் ஒருத் தொழிலினை செய்துக் கொண்டு வருகின்றீர். அந்தத் தொழிலுக்கு உங்கள் நாட்டில் திடீர் என்று தடை விதிக்கின்றார்கள். ஆனால் பக்கத்துக்கு நாட்டில் அதற்குத் தடை இல்லை. அங்கே நீங்கள் செல்லவும் தடை இல்லை. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள். பக்கத்துக்கு நாட்டிற்க்கு சென்று உங்கள் தொழிலை ஆரம்பிப்பீர்களா இல்லையா? ஆரம்பிப்பீர்கள் தானே!
அதையே தான் அந்த ஆரியர்களும் செய்தார்கள். புத்தம் பரவாது இருந்த, புத்த மன்னர்கள் இல்லாது இருந்த தமிழகத்தில் அவர்கள் நுழைய தடை ஒன்றும் இல்லை. போதாக்குறைக்கு வந்தோரை வாழ வைத்தே பழகிய தமிழகமும் அவர்களை வரவேற்க தடை ஒன்றும் இடவில்லை. போதாதா!!!
காலப்போக்கில் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைகின்றனர்.
"என்ன ஐயா... உங்களுக்கு பிழைக்க இடம் இல்லையா... அவ்வாறு சொல்லாதீர்கள்... நாங்கள் இருக்கும் வரை எங்கள் தேசத்தில் இல்லை என்பதே இல்லை... தாராளமாக நீங்கள் வரலாம்... தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது" என்றவாறே மன்னர்கள் அவர்களை வரவேற்கின்றனர்.
இந்த நிகழ்வு கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வடக்கில் செல்வாக்கினை இழந்த ஆரியர்கள் தெற்க்கே நுழைகின்றனர். வடக்கே வழக்கிழந்த வேள்விகளையும் இதர செயல்களையும் அவர்கள் தமிழகத்தில் மறு சீரமைப்பு செய்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவர்கள் எதிர்பாராத ஒரு செயல் நிகழ்கின்றது.
தன் பேரரசு முழுமையும் புத்தத்தினை பரப்பிய அசோகன் அதனை மற்ற நாடுகளுக்கும் பரப்ப ஆட்களை அனுப்புகின்றான். அசோகனின் செய்தியினை சுமந்தப்படி துறவிகள் உலகெங்கிலும் செல்லுகின்றனர். சீனத்திற்கு, கிரேக்கத்திற்கு...தமிழகத்திற்கு!
ஆரியர்களை வரவேற்று ஏற்றுக் கொண்ட தமிழர்கள் ... அசோகனின் துறவிகளையும் வரவேற்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அவ்வாறே அசோகனின் கருத்துகளையும்!!! புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது. புத்ததினைப் போன்றே ஏற்கனவே மற்றொரு நாத்திக சமயமான சமணமும் தமிழகத்தில் பரவி இருக்கின்றது.
சமணம் மற்றும் புத்த சமயங்களின் கருத்துக்கள் தமிழக மன்னர்களின் மனதினைக் கவர அவர்களுள் சிலர் அம்மதங்களுக்கு மாறுகின்றனர். ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை தமிழகம் சந்திக்கின்றது.
பல மொழி பேசும் பல மனிதர்கள், வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் இன்னும் பல மேற்கு நாட்டவர்கள்... பாலி மொழி பேசும் மௌரியர்கள்... சமயத்தினை பரப்ப வந்த துறவிகள்... ஆரியர்கள், ஒரே நேரத்தில் தமிழகத்தில் வந்து சேர்ந்து இருந்தனர்.
இவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும். தங்கு தடையின்றி பேசிப்பழக வேண்டும். அதற்கு என்ன செய்வது... சிந்திக்க ஆரம்பித்தனர் தமிழக மன்னர்கள்.
"தமிழ் இனிமையான மொழி... ஆனால் நம்முடைய மொழியினை இவர்கள் கற்க வேண்டும் என்று திணிப்பது சரியல்ல... மேலும் இவர்களுள் பலர் சில வேலை நிமித்தமாக வந்து இருக்கின்றனர்... இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினை நாம் உருவாக்கினால் என்ன?... நம் வணிகர்களும் அந்த நாட்டிற்கு சென்று வணிகம் செய்வதற்கு அம்மொழி உதவும் தானே!!!" என்று எண்ணி ஒரு மொழியினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொள்கின்றனர்.
தமிழ் அறிஞர்கள் அப்பொறுப்பினை எடுத்துக் கொண்டு முழு வீச்சில் ஒரு மொழியினை செம்மையாக உருவாக்க ஆரம்பிக்கின்றனர். தமிழில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றி இருப்பதினால் அவர்களின் வேலை எளிதாக அமைகின்றது. கிரேக்கம், இலத்தின், பாலி, அரேமியம் போன்ற மொழிகளையும் தமிழையும் சேர்த்து ஒரு மொழி உருவாக்கப்படுகின்றது.
"எம் தமிழ் மக்கள் பேசி மகிழ எம் உயிரினும் மேலான தமிழ் இருக்கின்றது... பிறநாட்டவர் தங்களது பணிகளை எளிதாக இங்கே மேற்கொள்ள இந்த புதிய மொழி உதவட்டும்... தமிழில் உள்ள செல்வங்கள் இம்மொழியின் வாயிலாக உலகிற்கு செல்லட்டும்" என்றக் கொள்கையோடு தமிழ் மன்னர்கள் அந்த புதிய மொழியினை உருவாக்கிப் பரப்புகின்றனர்.
அம்மொழி தான் சமசுகிருதம்.
சமசுகிருதம் என்றால் 'செம்மையாக செய்யப்பட்டது' என்பதே பொருள். இம்மொழி தோன்றியக் காலம் கிமு முதல் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறு தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி பிற்காலத்தில் தமிழினையும் தமிழையும் அடக்கி ஒடுக்க பயன்படும் ஒருக் கருவியாக மாறியது.
அது எவ்வாறு... காண்போம்! நம் பயணம் இப்பொழுது 'கிபி'யினுள் முதல் முறையாக நுழைகின்றது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.