16/03/2018

தமிழரின் கடல் வணிகச் சிறப்புக்கு...


தமிழரின் கடல் வணிகச் சிறப்புக்கு மேலும் ஒரு ஆதாரம்...

எகிப்து நாட்டில் தமிழ் எழுத்துகள் 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை (tamil brahmi inscription belonging to first century AD) கண்டுபிடிக்கப்பட்டன.

செங்கடல் கரையில் உள்ள குவெய்ர் அல் கடிம் (Quseir-al-Qadim, an ancient port with a Roman settlement on the Red Sea coast of Egypt) என்னும் துறைமுக நகரில் உடைந்த மண்ஜாடி ஒன்றில் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உள்ளன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தில் ரோமானியர்கள் தங்கி வாணிபம் செய்துள்ளனர். இந்த எழுத்துகள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் கண்டு அறியப்பட்டுள்ளது.

ஜாடியின் இரண்டு பக்கங் களிலும் இந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. “பனை உறி” என்ற எழுத்துகள் உள்ளன. கயிறுகள் கட்டித் தொங்க விடப்பட்டு அதில் பானைகள் அடுக்கி வைக்கப்படும். அது உறி எனப் பெயர்ப்படும்.

எகிப்துத்துறைமுக நகரில் அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்கிய இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீகாக் மற்றும் புளு (Prof. D. Peacock and Dr. L. Blue of University of Southampton, U.K) ஆகியோர் இதைக்கண்டு அறிந்துள்ளனர்.

லண்டனில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தின் மட்பாண்ட வல்லுநர் (Dr. Roberta Tomber) இதனை ஆராய்ந்து, இது இந்தியாவில செய்யப்பட்ட மண்பாண்டம் என சான்று அளித்துள்ளார்.

தமிழ் எழுத்தாய்வறிஞர் அய்ராவதம் மகாதேவன் (Iravatham Mahadevan) இவை தமிழ் எழுத்துகள் என்றும், 2100 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் உறுதிப் படுத்தியுள்ளார்.

புதுச்சேரியிலுள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் சுப்பராயலு (Prof. Y. Subbarayalu, French Institute of Pondicherry), நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜன் (Prof. K. Rajan of Central University, Puducherry) மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வகுமார் (Prof. V. Selvakumar, Tamil University, Thanjavur) ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து இதனைக் கண் டறிந்து அறிவித்துள்ளனர்..

“பானை உறி” என்ற எழுத்துகள் மிகவும் தெளிவாகவே பொறிக்கப்பட்டுள்ளதாக அய்ராவதம் மகாதேவன் தெரிவிக்கிறார். இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு பானைகள் கண்டு எடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

இதே காலத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் 1995 இல் பெரனைக் என்னும் ரோமானியர் வசித்த பகுதியில் (Berenike, a Roman settlement, on the Red Sea coast of Egypt) கண்டு எடுக்கப்பட்டன என்கிற விவரத்தை அய்ராவதம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் செங்கடல் வழியே ரோம நாட்டுடன் கடல் வணிகம் செய்து வந்தனர் என்று தமிழ்ச் சங்கப் புலவர்கள் எழுதிய பாடல்களிலும் மேலை நாட்டின் பழைய இலக்கியவாதிகளும் எழுதியதற்கு ஆதாரமாக இவை அமைந்துள்ளன.

கடலோடிகளாகக் கப்பல் மூலம் வணிகம் செய்து உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதனை இதனாலும் விளங்கிக் கொள்ளலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.