இப்பழமொழிக்கு தற்போது கூறப்பட்டு வரும் பொருள் இதுதான்..
ஒட்டக்கூத்தன் என்னும் புலவனுக்கு மட்டும் இரண்டு தாழ்ப்பாள் போட்டாளாம் அரசி.
இக் கருத்தின் பின்னணியாக இணையத்தில் கூறப்பட்டு வரும் கதை என்னவெனில்...
கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு. அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனக் கூப்பிட்டு எதாவது கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு.
இது கட்டுக்கதை என்பதைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு பொருள் கூறியதால் அதை சரிக்கட்ட ஒரு கதை தேவைப்படுகிறது.
இனி இப்பழமொழியின் உண்மையான நிலை என்ன என்று காணலாம்.
இப்பழமொழியின் உண்மையான வடிவம் இதுதான்...
ஒத்தக் கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். அது என்ன?
விடை: இந்த விடுமொழியில் வரும் கூத்தன் என்பது கூத்தாடும் இயல்புடைய நாக்கினைக் குறிப்பதாகும். தாழ்ப்பாள் என்பது உதட்டினைக் குறிப்பதாகும். இரண்டு தாழ்ப்பாள் என்பது மேலுதடு, கீழுதடு ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஒத்தையா ரெட்டையா என்ற சொல் வழக்கினைப் போல இந்த விடுமொழியானது
ஒத்தக் கூத்தனுக்கு (ஒரு நாக்குக்கு) இரட்டைத் தாழ்ப்பாள் (இரண்டு உதடுகள்) என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதே நாக்கையும் உதடுகளையும் விடைகளாகக் கொண்டு தான் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ' என்ற பழமொழியும் அமைந்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.