02/03/2018

தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலையின் மகத்துவம்...


ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒருவர் அணிந்திருக்கும் ஆடை அவரது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்று.

ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடையும் ஒருவரது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

வேட்டி : தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான ஆடையாகவுள்ள வேட்டி,  தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு  கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவது ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்பவர்கள் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிய முற்பட்டிருந்ததினால்  ஒன்றும் வியப்புக்குரியதல்ல. அந்த வகையில் தமிழர்களின் ஆடையாக வேட்டி அணிதல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வேட்டி அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் வேட்டியணிதல் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். தொல்காப்பியகாலம், சிலப்பதிகார காலத்தில் வேட்டி அணியும் வழக்கம் இருந்துள்ளது என்பர்.

சேலை : தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது, நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம். இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

பொதுவாகக் குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்கள், உடலின் பெரும் பகுதியையும் ஆடையால் போர்த்திக் கொள்வர். பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலிருப்பவர்கள் மிகவும் குறைந்த அளவு ஆடையையே அணிந்து கொள்வர். ஆனால், பூமத்திய ரேகைக்குப் பக்கத்து நிலத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் சேலையை ஏன் அணியவேண்டும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் தமிழ்ப் பெண்களிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்பு நலன்கள். இவை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்படுபவை. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துகிறாள். எனவே, தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக் கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.