கீழே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் யாரைப் பற்றி பேசப்போகிறோம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
பல மொழிகள் பேசும், பலவகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள் இந்த மக்கள். இந்தியா, எகிப்து போன்ற நாடுகளிடம் இந்தக் கலாசாரத்தின் தாக்கம் இருக்கிறது.
சுமார் 10,600 வருடங்களுக்கு முன்பாகவே, வீடுகளில் செடி, கொடி, மரங்கள், மிருகங்கள் வளர்த்தார்கள்.
சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மிருகங்களைத் தனியாக வளர்ப்பதிலிருந்து முன்னேறி, ஆட்டு, மாட்டு மந்தைகளைப் பராமரித்தார்கள்.
சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மீன் பிடிக்கும் வழக்கம் இருந்தது.
பேச்சு மொழி, ‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த’ மொழி. ஆனால், எழுத்து வடிவ மொழி சுமார் 6200 வருடங்களுக்கு முன்பாகவே நடைமுறையில் இருந்தது.கி.மு. 6000ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்க்கையில் கணிதம் அங்கம் வகித்தது. நிலங்களை அளப்பதற்காகப் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டது. 60 இலக்கங்கள் (Numerals) இருந்தன.
கண்டறிய முடிந்ததா? இன்னும் ஒரு க்ளூ. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை பிரமாண்ட முன்னேற்றங்களைக் கண்டுவிட்டதால் உலகின் எல்லா நாகரிகங்களையும்விட, இந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முறைதான் முந்தையது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இதனால், நாகரிகத்தின் தொட்டில் என்றும் இவர்கள் வாழ்ந்த பிரதேசம் அழைக்கப்படுகிறது.
ஆம், நாம் இங்கே முதலில் பார்க்கப்போவது மெசபடோமியா. இங்கே வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள்.
பூகோளம்...
இன்றைய இராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ்.
வடக்குப் பாகம் மலைகளும் சமவெளிகளும் இருந்தன. பருவ மழை தவறாமல் பெய்ய, இந்த நில அமைப்பே காரணம். இதனால், காலம் பொய்த்தாலும், இந்த நதிகள் பொய்க்கவில்லை. வட பகுதியான மெசபடோமியா பொன் விளையும் பூமியாக இருந்தது.
உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில்தாம். இதற்குக் காரணம் உண்டு. மனிதனின் அடிப்படைத் தேவை உணவு. வயிறு நிறைந்திருந்தால்தான் அவனால் வாழ்க்கையின் பிற அம்சங்களில் கவனம் செலுத்தமுடியும். இசை, இலக்கியம், விளையாட்டு என்னும் கலைகளில் ஈடுபட முடியும், கலைகளை வளர்க்கமுடியும். இந்த வளர்ச்சிதானே நாகரிகம்! மெசபடோமிய நாகரிக வளர்ச்சிக்கும் ஜீவநாதம் யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் ஆறுகள்தாம்.
முக்கிய மன்னர்கள்...
மெசபடோமியாவை மன்னர்கள் ஆண்டார்கள். இவர்களுள், முக்கியமானவர்கள் மூவர்...
1. கில்காமேஷ் (Gilgamesh)...
இவர் கி. மு 2600ல் வாழ்ந்தார். மெசபடோமியாவின் ஒரு பகுதியான உருக் (Uruk) என்கிற ஆற்றங்கரைப் பகுதியை 126 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் மறைந்து ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கில்காமேஷ் காவியம் என்று எழுதி வைத்தார்கள். உலகத்தின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு இதுதான் என்பது அறிஞர்கள் கணிப்பு. இந்தக் காவியம் களிமண் பலகைகளில் 12 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த நூலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. வீர சாகசம் நிறைந்தவராக, மனிதராகப் பிறந்த கடவுள் அவதாரமாக இந்தக் காவியம் கில்காமேஷை வர்ணிக்கிறது.
2. ஹம்முராபி (Hammurabi)...
இவர் கி. மு. 1792 ல், தன் பதினெட்டாம் வயதில், மெசபடோமியாவின் பகுதியான பாபிலோன் சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாகப் பதவியேற்றார். ஒன்றுபட்ட மெசபடோமியாவை உருவாக்கினார்.
அந்த நாட்களில் எது நியாயம், எது தவறு, எந்தக் குற்றங்கள் செய்தால் என்ன தண்டனைகள், என்பவை வரையறுக்கப்படவில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தியவர் ஹம்முராபி. 282 குற்றங்களும், ஒவ்வொன்றையும் செய்தால் என்னென்ன தண்டனை என்னும் விவரங்களும் பட்டியலிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்காக, இவை 12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டு பிரம்மாண்டமான தூண்போன்ற அமைப்பில் பதிக்கப்பட்டன. இவை ஹம்முராபி சட்டங்கள் (Hammurabi Code) என்று அழைக்கப்படுகின்றன.
ஹம்முராபி சட்டங்கள் உள்ளடக்கியிருக்கும் அம்சங்கள் – மதம், ராணுவ சேவை, வியாபாரம், அடிமைகள், தொழிலாளர்களின் பொறுப்புகள் போன்றவை. இன்றைய சூழலில், சில சட்டங்கள் விநோதமாகத் தோன்றினாலும், அன்றைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை என்னும் கண்ணோட்டத்தில் நாம் இந்தச் சட்டங்களைப் பார்க்கவேண்டும்.
யாராவது இன்னொருவர் மேல் குற்றம் சாட்டினால், இருவரும் நதிக்கரைக்குப் போகவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் நதியில் குதிக்கவேண்டும். மூழ்கினால், அவர் குற்றவாளி என்று அர்த்தம். அவருடைய மொத்த சொத்துக்களும் குற்றம் சாட்டியவருக்கு சொந்தம். தண்ணீரில் மூழ்காமல் தப்பித்தால், அவர் நிரபராதி. குற்றம் சாட்டியவருக்கு மரண தண்டனை. அவர் சொத்துகள் முழுக்க, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்படும்,
ஒரு வியாபாரி, வியாபாரத்தில் முதலீடு செய்ய, தரகரிடம் பணம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்தப் பணம் நஷ்டமானால், அதைத் தரகர் வியாபாரிக்கு ஈடு கட்டவேண்டும்.
3. நெபுகாட்நேஸர் (Nebuchadrezzar II)...
கி. மு. 605 முதல் நாற்பது ஆண்டுகள் பாபிலோன் பகுதியை ஆண்டவர். சாலைகள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும், கோயில்களைப் புதுப்பித்தும், பல முன்னேற்றங்கள் செய்தவர். பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டம் இவருடைய உருவாக்கம்தான். கட்டடக் கலையில் மெசபடோமியரின் அற்புதமான திறமையைத் தொங்கு தோட்டம் பறை சாற்றுகிறது.
இது ஓர் அடுக்குத் தோட்டம். பெரிய பெரிய தூண்களை எழுப்பி அவற்றின்மேல் பல அடுக்குத் தளங்களை எழுப்பி ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. செயின் பம்ப் (Chain Pump) என்கிற அமைப்பின் உதவியால் யூப்ரட்டீஸ் நதியின் தண்ணீர் தொங்கு தோட்டத்தின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டது. பின்னாளில் வந்த பூகம்பம் தொங்கு தோட்டத்தை அழித்துவிட்டது.
மத நம்பிக்கைகள்...
கில்காமேஷ் மன்னர், மூன்றில் இரண்டு பங்கு தெய்வம், மூன்றில் ஒரு பங்கு மனிதர் என்று கில்காமேஷ் காவியம் வர்ணிக்கிறது. மன்னர்களுக்கும், மக்களுக்கும் அதீதக் கடவுள் நம்பிக்கை இருந்தது.
உலகம் தட்டையான வடிவம் கொண்டதாக சுமேரியர்கள் நம்பினார்கள். பூவுலகுக்கு மேலே, கடவுள்கள் வாழும் சொர்க்க லோகம். பூவுலகையும், சொர்க்கத்தையும் சுற்றி வளைத்து நான்கு பக்கங்களிலும் கடல். இந்தக் கடலிருந்துதான் பிரபஞ்சம் உருவானது.
நிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள்தாம் முதல் கடவுள்கள்.
இவர்களுள் வாயு பகவான் பிறரைவிட அதிக சக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களுக்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருந்தன. ஆரம்பத்தில் கடவுள்களை ஊருக்கு நடுவே பெரிய மேடைவைத்து வழிபட்டார்கள். இந்த மேடையைச் சுற்றிக் கட்டடம் எழுப்பினார்கள்.
கிமு 2200 – 500 இடைப்பட்ட காலத்தில் ஸிகுரட்கள் (Ziggurats) என்னும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. ஸிகுரட் என்றால் கடவுளின் மலை என்று பொருள். இவை வெறும் கட்டங்களல்ல, அழகு கொஞ்சும் பிரம்மாண்டங்கள். கோட்டைபோல் களிமண் செங்கல்லாலும் உட்பக்கம் சுட்ட செங்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. சுற்றிலும் பிரமிட்போல் சரிந்த சுவர்கள், அவற்றில் ஏராளமான படிகள். கோவிலுக்குள் மேடைமேல் கடவுள் சிலை. பிரம்மாண்ட வடிவம், சிறப்பான கட்டமைப்பு, சுவர்களில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், சிற்பங்கள், உலோகங்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், பளபளப்பும் வழவழப்புமான தரை ஆகியவை ஸிகுரட்களின் சிறப்புகள்.
கோயில்கள் மத குருக்களால் பராமரிக்கப்பட்டன. சமூகத்தில் அதிக மரியாதை பெற்றவர்கள் மதகுருக்கள்தாம். மக்கள் மட்டுமல்ல, அரசர்களும் இந்தப் பூசாரிகளை ஆண்டவனின் மறுவடிவமாக நம்பினார்கள். மன்னர்களும் மக்களும், எல்லாப் பிரச்னைகளுக்கும் மத குருக்களை நாடினார்கள். அவர்கள் முடிவுதான் இறுதியானது. குருமார்களின் தேவைகளுக்கும் கோயுலின் பூஜை, நைவேத்தியச் செலவுகளுக்குமாக அரசாங்கம் எல்லாக் கோவில்களுக்கும் விவசாய நிலங்கள் அளித்தது. இவற்றைப் பராமரித்து, கோயில்களுக்குத் தேவையான செலவுகள் செய்து, மிச்சத்தை மதகுருக்கள் வைத்துக்கொள்ளலாம். கணிசமான வருமானம், சமூக அந்தஸ்து ஆகிய காரணங்களால், பூசாரி ஆவதற்கு எக்கச்சக்கப் போட்டி இருந்தது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.