11/03/2018

குலம் தழைக்க நடத்தப்படும் நிகழ்வான திருமணங்களை இப்போதெல்லாம் மண்ணையும் தன்னையும் மலடாக்கும் நெகிழிகளால் நிறைத்துக் கொண்டிருக்கிறோம்...


இதில் ஏழை - பணக்காரன், படித்தவன் - பாமரன் என்ற வேறுபாடும் இல்லை. போலிப் பெருமை காட்டும் நுகர்வு வெறி மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

இலையில் ஊற்றிய பாயாசத்துக்கு ருசி அதிகம். ஆனால் சமையல்காரர்கள் தங்கள் சௌகரியத்துக்கு பரிமாறுவதற்காக அதற்கு ஒரு குவளை பழக்கினார்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இலைக்கும் ஐந்து நிமிடம் தண்ணீர் குடிக்கவும் தனிக்குவளை வைத்து உவகையடைகிறோம்.... அதற்காக பல மரங்கள் அழிக்கப்பட்டு பூமி மீது குப்பைகளை நிறைக்கிறோம் என்ற உண்மை தெரியாமல். அதிலும் பிளாஸ்டிக் குவளைகள் என்றால் இன்னும் கேடு அதிகம். கணக்கு போட்டு பார்த்தால் தண்ணீர், பாயாச குவளைகளை எவர்சில்வர் டம்ளர்களில் வைத்து அதை கழுவ தனியாய் ஒரு ஆளை நியமித்தாலும் அதற்கு ஆகும் செலவும் குறைவாகவே இருக்கும்.

சாப்பிட்டு முடித்த பிறகு குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்பது அடிப்படை உடலியல் விதி. ஆனால் இன்று கிட்டத்தட்ட எல்லா திருமணங்களிலும் ஐஸ்க்ரீம் தருவது ஒரு பெருமையாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்த்த வந்தவர்களின் வயிற்றைக் கெடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஐஸ்க்ரீம் போட்டுத்தரும் குவளைகளால் உருவாகும் குப்பை மலை ஒரு பக்கம்.

இது எல்லாம் போதாதென்று சாப்பிட்டு முடித்த இலைகளை எடுத்துப் போடுவது பெரிய பெரிய கருத்த நெகிழிப் பைகளில். இலைகளையும் மட்க விடாமல் செய்து அதிலும் அறியாமை.

சாமானியரும் சரி, லட்சங்களில் ஏன் கோடிகளில் கூட ஒரு திருமணத்துக்கு செலவழிக்கும் நல்லோரும் சரி, பல கோடிகளுக்கு அதிபதிகளான திருமண மண்டப முதலாளிகளும் சரி இந்த விசயத்தில் காட்டுகிற அலட்சியம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

ஆறு, குளங்களில் கொட்டி நீர் நிலைகளை அழிப்பது, தீ வைத்து எரித்து காற்றை சுவாசிக்கத் தகுதியற்றதாக்குவது என இப்போதெல்லாம் ஒவ்வொரு திருமணமும் நாம் வாழும் பூமியை மூச்சு திணறத் திணற அடிக்கிற தாக்குதல்களாக மாறி வருகின்றன. அந்த நிகழ்வுகள் மூலம் வாரிசுகள் உருவாவதும், செயற்கைக் கருவூட்டல் மூலம் அடுத்த ஆணின் விந்து, வேறொரு பெண்ணின் கருமுட்டை மூலம் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைகளின் ஆரோக்கியமும் பெருத்த கேள்விக்குறியாகி வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.